எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லையில் விபத்து தொடர்பாக ஏற்பட்ட தகராறில், கார் பேனட்டில் இருசக்கர வாகன ஓட்டியை இழுத்துச்சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நெல்லை மாநகர காவல் துறையில் போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக காந்தி ராஜன் என்பவர் பணியாற்றி வருகிறார். சுத்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வரும் காந்தி ராஜனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் அவர் தனது சொந்த காரில் பணிக்கு வந்து செல்வது வழக்கம்.
நேற்று இரவு அவர் பணி முடிந்து நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு வழியாக சுத்தமல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற பேருந்து திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பேருந்தின் பின்னால் பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர் தனது பைக்கை நிறுத்தினார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த காந்தி ராஜனின் கார் அந்த இளைஞரின் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர், மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காரில் இருந்த காந்திராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிரச்னை முற்றிய நிலையில் அங்கிருந்து புறப்பட்ட காந்திராஜன், காரை மறித்து நின்ற இளைஞர் மீது ஏற்ற முயன்றுள்ளார். இதனால் காரின் பேனட்டில் ஏறி அந்த இளைஞர் அமர்ந்து கொள்ள, அப்படியே சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு காரை காந்தி ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அந்த இளைஞர் கத்திச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதனிடையே வீடியோவை அடிப்படையாகக் கொண்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காந்தி ராஜனை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து ஆணையர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவிட்டுள்ளார். சம்பவம் நடந்த போது அந்த வாலிபரும், சப்- இன்ஸ்பெக்டரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காந்தி ராஜனை சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. குற்றச்சாட்டுக்குள்ளான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 6 மாதங்களே உள்ளது குறிப்பிடத்தக்கது.