எழுத்தின் அளவு: அ+ அ- அ
உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டதால் வெள்ளநீரில் சிக்கி இதுவரை 7 பேர் மாயமாகியுள்ளனர். சமோலி மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதால் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ச்சியான இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் அண்மையில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். டேராடூனில் இருந்து பிரபலமான மலைவாசஸ்தலமான முசௌரிக்கு செல்லும் சாலை தொடர்ந்து 2வது நாளாக மூடப்பட்டதால், 2 ஆயிரத்து 500 சுற்றுலாப் பயணிகள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்கவும், பாதிக்கப்பட்டு பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளை துரிதப்படுத்தவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
டேராடூனில் மேகவெடிப்பு ஏற்பட்ட நான்கு நாட்களுக்குப் பின்னர், சமோலி மாவட்டத்தின் நந்தநகர் காட் பகுதியில் நேற்று இரவு மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக நந்தநகரின் குந்த்ரி லங்காஃபாலி பகுதியில் ஆறு வீடுகள் இடிந்து விழுந்தன. ஏழு பேரை காணவில்லை என்றும், இருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கையும், இடிபாடுகளை அகற்றும் பணியும் நடந்து வருகிறது.
இதனிடையே, உத்தரகாண்டில் நேற்று மாலை நிலச்சரிவு தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோவை பாஜக எம்பி அனில் பலுனி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ஆண்டு உத்தரகண்டில் ஏற்பட்ட கடுமையான மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் மிகவும் ஆழமான காயங்களை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவற்றை குணப்படுத்த நீண்ட காலம் எடுக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த சவாலான சூழ்நிலைகளில் சாலைகளில் இருந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தேசிய மாற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பை பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.