கருத்தரிக்காததால் ஏக்கம் - சிகிச்சை பெற்ற பெண் உயிரிழந்த சோகம்,

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்... மருத்துவர்களின் தவறான சிகிச்சையே இளம்பெண் உயிரிழக்க காரணம் என குற்றம் சாட்டி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பற்றிய தொகுப்பை தற்போது காண்போம்.

விழுப்புரம் அருகே உள்ள அரியலூர் திருக்கை கிராமத்தை சேர்ந்தவர் ஜெனிபர். ஜெனிபருக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில் மருத்துவ சிகிச்சை செய்துகொள்ள திட்டமிட்டுள்ளார்.

இதற்காக விழுப்புரத்தில் உள்ள சுமதி மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனையை ஜெனிபர் அணுகி உள்ளார்... அங்கு ஜெனிபருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், கர்ப்பப்பை குழாயில் அடைப்பு இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என  கூறியுள்ளனர்.

இதை தொடர்ந்து ஜெனிபருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அதிகாலையில் ஜெனிபர் உயிரிழந்ததாக உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இதனால் அதிர்ச்சிக்குள்ளான ஜெனிபரின் உறவினர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர், மருத்துவமனையில் குவிந்தனர். அப்போது மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சை காரணமாகவே ஜெனிபர் இறந்ததாக கூறி தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

என் மகளை கொன்றுவிட்டார்களே எனக் கூறி உயிரிழந்த ஜெனிபரின் தாய் கதறி அழுதது காண்போர் நெஞ்சை உலுக்கும் வகையில் அமைந்திருந்தது.

இதனால் மருத்துவமனையில் பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில் விழுப்புரம் நகர போலீசார் மருத்துவமனை முன்பு குவிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளை ஆவேசத்துடன் குறிப்பிட்ட ஜெனிபரின் உறவினரான எம்சிபா, சர்க்கரை நோய் இருக்கும்போது மைனர் அறுவை சிகிச்சை செய்யலாம் எனக்கூறி ஆபரேஷன் செய்து விட்டு, ஜெனிஃபரை மருத்துவர்கள் கொன்று விட்டதாக உருக்கத்துடன் சாடினார்.

உயிரிழந்த பின் லட்சத்தில் ஒருவருக்கு இது மாதிரி ஆகும் என மூத்த மருத்துவர் ஒருவர் கூறியதாக தெரிவித்த எம்சிபா, இதை முதலிலேயே கூறியிருந்தால் குழந்தையே தேவை இல்லை எனக்கூறி ஜெனிபரை வீட்டுக்கு அழைத்து சென்று இருப்போம் என வேதனையுடன் தெரிவித்தார்...

மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜெனிபரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், அரசு மருத்துவர்களை~கொண்டு உயிரிழந்த ஜெனிபரின் உடலை உடற்கூர் ஆய்வு செய்து உயிரிழப்பிற்கான~உண்மை காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்ற போலீசார், ஜெனிபரின் உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி உடற்கூர் ஆய்வுக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கருத்தறிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் சிகிச்சைக்கு சென்று வந்த இளம்பெண் காலனிடம் சென்றதால் பெற்றோரும், உறவினர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Night
Day