ஆங்கிலப் புத்தாண்டு - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக மக்களை நாள்தோறும் கசக்கி பிழிந்த மன்னராட்சி மறைந்து, தமிழகத்தில் உண்மையான மக்களாட்சி அமைகின்ற ஆண்டாக பிறக்கின்ற 2026 ஆம் ஆண்டு மலரட்டும் என அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், புலரும் புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடும் தமது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மலர்கின்ற புத்தாண்டில் அராஜகம், அத்துமீறல், வன்முறை, போதை கலாச்சாரம் ஆகியவை ஒழிந்து தமிழகத்தில் அமைதியும், ஆனந்தமும், நிம்மதியும் தவழட்டும் - இருள் நீங்கி ஒளி பிறக்கட்டும் - ஜனநாயகம் தழைக்கட்டும் - தீண்டாமை, கல்லாமை, இல்லாமை ஆகியவை அகன்று சமய நல்லிணக்கமும், சகோதரத்துவமும், சமூக ஒற்றுமையும் தழைக்கட்டும் - அனைவரது வாழ்வும் செழிக்கட்டும் - வளங்கள் கொழிக்கட்டும் - மகிழ்ச்சி பொங்கட்டும் என தமிழக மக்கள் அனைவரையும் மனதார வாழ்த்துவதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

ஒன்றுபட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம்! எந்த நிலையிலும், எந்த வகையிலும் தமிழ்நாட்டின் உரிமைகளை ஒரு போதும் விட்டுத்தரமாட்டோம்! உறுதிகொண்ட உள்ளத்துடன் பொற்காலத் தமிழகத்தை புதிதாய் மீண்டும் படைப்போம்! என ஒவ்வொரு இளம் வயதினரும் தங்களது பங்களிப்பை நம் தாயகத்திற்கு அர்ப்பணித்திடும் வகையில் இந்நன்னாளில் உறுதி ஏற்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மக்களை நாள்தோறும் கசக்கி பிழிந்த மன்னராட்சி மறைந்து, ஏழை, எளிய, சாமானிய மக்கள் ஏற்றம் பெறவும், விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வில் முன்னேற்றம் பெறவும், பெண்களுக்கு பாதுகாப்பும், அனைவருக்கும் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கின்ற ஆண்டாகவும், தமிழகத்தில் உண்மையான மக்களாட்சி அமைகின்ற ஆண்டாகவும் பிறக்கின்ற 2026 ஆம் ஆண்டு மலரட்டும் என தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day