புத்தாண்டு கொண்டாட்டம் - தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

2026 ஆங்கில புத்தாண்டு நாளை உலகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் கடற்கரை ரிசார்ட்டுகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றன. 

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

குறிப்பாக கடற்கரை, வழிபாட்டு தலங்களில் கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்பட உள்ளனர். மெரினா கடற்கரையில் மட்டும் ஆயிரம் போலீசார் நிறுத்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடலில் இறங்கி குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதோடு மட்டுமின்றி மதுபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும், சாலையின் நடுவே கேக் வெட்டுவது, பட்டாசு வெடிப்பது, பெண்களை மடக்கி புத்தாண்டு வாழ்த்து சொல்வது, பைக் ரேஸ் போன்ற சம்பவங்களில் யாரும் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை இணைப்புச் சாலைகளில் போக்குவரத்து மாற்றப்படுகிறது. கடற்கரை உட்புற சாலையில் இன்றிரவு 7 மணி முதல் ஜனவரி 1ம் தேதி காலை 6 மணி வரை போக்குவரத்து மூடப்படும் என்றும் சென்னையில் அனைத்து மேம்பாலங்களும் இன்றிரவு 10 மணி முதல் ஜனவரி 1ம் தேதி காலை 6 மணி வரை மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடற்கரை உட்புற சாலையில் இன்றிரவு 7 மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது என்றும் அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.


Night
Day