இனிக்க இனிக்க பேசி ரூ.10 கோடி மோசடி... அம்பலமான நாடகம்... அதிர்ந்துபோன காவல்துறை....

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் கடன் மோசடி விவகாரத்தில் பாஜக நிர்வாகி வீட்டில் இருந்து மீட்கப்பட்ட சினிமா துணை நடிகரின் மனைவி விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மீட்கப்பட்ட துணை நடிகரின் மனைவி கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு நாடகமாடியதால் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் சினிமா துணை நடிகர் மதியழகன். இவரது மனைவி மாலதி. மதியழகன், சென்னையில் சினிமா மற்றும் நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். 

இவரது மனைவி மாலதி, அருள்வாக்கு கூறுவது, ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வது போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே தனது மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என கூறி போலி பத்திரங்களை கொடுத்து, பலரிடம் பல லட்சங்கள் கடனாக பெற்று ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார் மாலதி..

இந்தநிலையில் தனது மகன் திரைப்படம் எடுத்து வருவதாகவும், தனது மகனின் திருமணத்திற்காகவும், பணம் தேவைப்படுவதாகவும் கூறி, பாலக்கரை பகுதியைச் சேர்ந்த உமாராணி என்பவரிடம் சுமார் 6 லட்சம் ரூபாய் வரை கந்து வட்டிக்கு கடன் பெற்றுள்ளார் மாலதி.

கொடுத்த கடனை நீண்ட நாட்களாகியும், திருப்பி கொடுக்காததால், ஆத்திரமடைந்த உமாராணி, மாலதியை தனது வீட்டில் கடந்த 2 மாதமாக அடைத்து வைத்து கடன் தொகையை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புகார் எழுந்த நிலையில், தகவலறிந்த காந்தி மார்க்கெட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மாலதியை மீட்டனர். அப்போது பயந்த சுபாவத்துடன் காணப்பட்ட மாலதி, போலீசாரின் கால்களில் விழுந்து தன்னை விட்டுவிடுமாறும் கதறினார். 

இதனையடுத்து கடன் வழங்கிய உமாராணி மற்றும் கடன் பெற்ற மாலதியை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் சினிமா துணை நடிகரின் மனைவி மாலதி, சுமார் 20க்கும் மேற்பட்டோரிடம் 10 கோடி ரூபாய் வரை கடன் பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. 

இதனையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ஆன்லைன் வர்த்தகத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறி, திருச்சியை சேர்ந்த பெண் ஆடிட்டர் சீதா மனோகரன் என்பவரிடம், 1 கோடியே 88 லட்சம் மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதுதொடர்பாக பெண் ஆடிட்டர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார், பல கோடி மோசடி செய்த மாலதியை கைது செய்துள்ளனர்.  கந்துவட்டி கொடுமையால் கொடுமைப்படுத்தப்பட்டதாக மாலதி நாடகமாடிய நிலையில் மீட்கப்பட்ட இரண்டே நாளில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலதியிடம் நடத்தப்படும் விசாரணையில் தினம் தினம் புதிய தகவல் வெளியாகி போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர், எத்தனை பேரை ஏமாற்றியுள்ளார், எவ்வளவு பணம் மோசடி நடைபெற்றுள்ளது என்பது இனி வரும் நாட்களில் தொடர்ந்து வெளியாகும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day