இந்தி தெரிந்தால் தான் டிக்கெட்... தமிழர்களுக்கு நிகழ்ந்த அவலம்...

எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இந்தி மொழி மட்டுமே தெரிந்த பணியாளர் பணியில் இருந்ததால், டிக்கெட் எடுக்க முடியாமலும், முன்பதிவு செய்ய முடியாமலும் பயணிகள் பரிதவித்தனர்.  அவர்கள் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை ரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் தரும் ரயில் நிலையங்களில் ஒன்றாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையம் உள்ளது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் மட்டுமின்றி தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி ஆகிய நான்கு மாவட்ட மக்கள் கோவில்பட்டி ரயில் நிலையத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். 

குறிப்பாக பயணிகள் டிக்கெட் விற்பனையில் கோவில்பட்டி ரயில் நிலையம் அதிக வருமானத்தை ஈட்டி வருகிறது.  மக்கள் அதிகம் வரும் ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்ய மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்க ஒரே ஒரு கவுண்டர் மட்டுமே உள்ளது. டிக்கெட் கவுண்டர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

அந்த ஒரே ஒரு கவுண்டரிலும் வட மாநிலத்தை சேர்ந்த பணியாளர் வேலையில் உள்ளதால் பயணிகள் டிக்கெட் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கவுண்டரில் உள்ள வடமாநிலத்தை சேர்ந்த ஊழியருக்கு, இந்தியை தவிர்த்து தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியவில்லை என கூறப்படுகிறது. 

இந்தி மொழி மட்டுமே தெரிந்திருந்த காரணத்தால் டிக்கெட் எடுக்க வந்தவர்கள் மற்றும் தட்கலில் டிக்கெட் முன்பதிவு செய்ய வந்தவர்கள் கூறிய விவரங்களை புரிந்து கொள்ள முடியாமல், வட மாநில பணியாளர் பரிதவித்துள்ளார்.  மேலும் இந்தியில் பேசினால் மட்டும்தான் விரைந்து தன்னால் டிக்கெட் கொடுக்க முடியும், இல்லையென்றால் மெதுவாகத்தான் தருவேன் என்றும் அலட்சியமாக கூறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதனால் தட்கலில் முன்பதிவு செய்ய வந்தவர்களும், சாதாரண டிக்கெட் எடுக்க வந்தவர்களும் சிரமத்திற்கு ஆளாகினர். 

சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் வரை டிக்கெட் எடுக்க நேரிட்டதால், ஆத்திரமடைந்த பயணிகள் அங்கிருந்த ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ரயில்வே போலீசார் மற்றும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் ரயில் நிலைய மேலாளர் அலுவலகம் சென்றனர். அங்கு பணியில் இருந்த ஊழியரும் அலட்சியமாக பதில் கூறியதால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

பின்னர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்திய ரயில்வே போலீசார், தெற்கு ரயில்வே தலைமை நிர்வாகத்திடம் புகார் அளிக்குமாறு கூறினர். இந்த சம்பவங்களால் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது. தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் தமிழ் அல்லது ஆங்கிலம் தெரிந்த ஊழியரை பணியில் அமர்த்த வேண்டும் என்றும், இல்லையெனில் தமிழ் தெரிந்த பணியாளரை உதவிக்கு அமர்த்த வேண்டும் என்றும் ரயில் பயணிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day