2 பேருந்துகள் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபாளையத்தில் இருந்து தென்காசியை நோக்கி பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதேபோல், தென்காசியில் இருந்து கோவில்பட்டியை நோக்கி மற்றொரு தனியார் பேருந்தும் சென்று கொண்டிருந்தது. அப்போது இடைகால் காமராஜர்புரம் பகுதியில் இரண்டு பேருந்துகளும், நேருக்கு, நேர் மோதின. 

இந்த கோர விபத்தில் 2 பேருந்துகளும் அப்பளம்போல் நொறுங்கியது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் மற்றும் மீட்பு படையினர் காயம் அடைந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்தில் அதிக பயணிகள் இருந்ததால், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பலரும் கவலைகிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தென்காசி மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் குவிந்து வருகின்றனர். 

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த குழந்தை உட்பட 4 பேர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தென்காசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும், விபத்துக்குள்ளான இரண்டு தனியார் பேருந்துகளின் உரிமங்களை ரத்து செய்ய தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Night
Day