பெண்கள் போட்டியில் பங்கேற்ற ஆண்... சர்ச்சையில் முடிந்த குத்துச்சண்டை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாரீஸ் ஒலிம்பிக்கில் பயாலஜிக்கல் ஆண் என அறியப்படும் வீரருக்கு எதிரான குத்துச்சண்டையில் பங்கேற்ற இத்தாலிய பெண் வீராங்கனை, 46 வினாடியில் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்திலிருந்தே பேசும் பொருளான விஷயம் இன்று ஒரு வீராங்கனையின் கனவை சிதைத்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

2024-ம் ஆண்டுக்கான பாரீஸ் ஒலிம்பிக் தொடர் கடந்த ஜுலை 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடரில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர். 

இதில் தங்கள் நாட்டிற்காக உலக அரங்கில் பதக்கங்களை வெல்லும் கனவோடு ஒவ்வொரு வீரர், வீராங்கனையும் ஒலிம்பிக்கில் உயிரை கொடுத்து போராடி வருகின்றனர். அப்படி கண்ணில் கனவோடும், நெஞ்சில் லட்சியத்தோடும் குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்ற இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி, தன்னுடைய கனவை எட்டிப்பிடிக்க இன்னும் இரண்டு அடிகளே மீதமிருந்த நிலையில் வெளியேறக்கூடாத வகையில் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார்.

ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 66 கிலோ எடைப்பிரிவு 16வது சுற்று போட்டியானது கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்றது. அதில் இத்தாலியை சேர்ந்த ஏஞ்சலா கரினி, அல்ஜீரியாவை சேர்ந்த இமானே கெலிஃபை எதிர்கொண்டு விளையாடினார். இதில் அல்ஜீரியா வீராங்கனை, பயாலஜிக்கல் ஆண் என அறியப்பட்டதால், கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் இமானே கெலிஃப் விளையாட அனுமதிக்கப்பட்டது ஆரம்பத்திலிருந்தே பேசுபொருளாக இருந்து வந்தது. இருப்பினும் பெண்களுக்கான 66 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கரினி, பயாலஜிக்கல் ஆண் என அறியப்படும் இமானே கெலிஃபுக்கு எதிராக பங்கேற்று விளையாடினார்.

பின்னர் குத்துச்சண்டை போட்டி தொடங்கிய 46 வினாடியில் முடிந்துவிட்டதாக நடுவரால் அறிவிக்கப்பட்டது. அதாவது போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே கரினி மூக்கில் வேகமாக குத்திய கெலிஃப், இத்தாலி வீராங்கனையின் மூக்கை உடைத்தார். ரத்தம் வழிந்த நிலையில் அதிக வலியை பொறுத்துக்கொள்ள முடியாத கரினி, இனி போட்டியில் தொடர முடியாது என நடுவரிடம் கூறினார். அதனால் வெற்றிபெற்றதாக கெலிஃபின் கைகள் உயர்த்தப்பட்டன. ஆனால் போட்டியில் தோற்ற கரினி, கெலிஃபுடன் கைகுலுக்க கூட விருப்பமில்லாமல் விலகிவிட்டார். மேலும் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் மேடையிலேயே முட்டிப்போட்டு கரினி அழுதார். 

இந்த சம்பவம் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கரினியின் நிலைமையை பார்த்த நெட்டிசன்கள், ஆண் மரபணு குணாதிசயங்களைக் கொண்ட விளையாட்டு வீரர்கள், பெண்கள் போட்டியில் எப்படி அனுமதிக்கப்படுகிறார்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெட்கப்பட வேண்டும் என தங்களின் ஆதக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஏஞ்சலா கரினியின் தோல்விக்கு பிறகு பேசிய அவருடைய பயிற்சியாளர், போட்டிக்கு முன்னதாக இத்தாலியிலிருந்து பலர் கரினியை அழைத்து, தயவுசெய்து போட்டியில் பங்கேற்காதே எனவும், கெலிஃப் ஒரு ஆண் எனவும் எச்சரிக்கை செய்ததாக கூறியுள்ளார். 

தோல்விக்கு பிறகு பேசிய கரினி, நான் என் மூக்கில் கடுமையான வலியை உணர்ந்தேன். ஒரு குத்துச்சண்டை வீரரின் முதிர்ச்சியுடன், போதும் என்ற முடிவை நான் எடுத்தேன். ஏனென்றால் நான் தொடர விரும்பவில்லை, என்னால் போட்டியை முடிக்க முடியவில்லை என்று கண்ணீருடன் கூறினார்.

மேலும் பாலின தகுதி குறித்து பேசிய அவர், நான் இங்கு தீர்ப்பளிக்க வரவில்லை என்றும் ஒரு தடகள வீரர் இப்படி இருப்பது சரியில்லை என்பதை நான் முடிவுசெய்ய முடியாது என்றும் கூறினார். நான் குத்துச்சண்டை வீரராக என் வேலையை மட்டுமே செய்தேன் எனவும் வளையத்தில் இறங்கி சண்டையிட்டேன் எனவும் கூறினார். ஆனால் கடைசி வரை செல்ல முடியாமல் உடைந்த இதயத்துடன் வெளியேறுகிறேன் என்று கூறி அழுகையை அடக்க முடியாமல் பேசினார்.

தொடர்ந்து இந்த சர்ச்சை விவகாரம் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

varient
Night
Day