எழுத்தின் அளவு: அ+ அ- அ
ரஷ்யா அமைதிப்பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்றால், சீனா, இந்தியா பிரேசில் ஆகிய நாடுகளுக்கு 100 சதவீத இரண்டாம் நிலை தடை விதிக்கப்படும் என நேட்டோ கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு முதல் உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. 3ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் இந்த போரை நிறுத்துவதற்கு, அமெரிக்காவும், நேட்டோ கூட்டமைப்பும் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், புதின் பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதால் போர் நிறுத்தத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதனால், ரஷ்யாவை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தும் வகையில் அந்நாட்டுக்கு எதிராக அதிக வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப், அடுத்த 50 நாள்களுக்குள் ரஷ்யா போர் நிறுத்தம் குறித்த ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது கடுமையான வரி விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.
இதனிடையே ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்கும் மசோதாவும் அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறினால், ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனாவுக்கு 500 சதவீத வரி விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ருட்டே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் செனட்டர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க் ருட்டே, ரஷ்ய அதிபர் புடினை தொடர்பு கொண்டு அமைதி பேச்சுவார்த்தைக்கு உறுதியளிக்க இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய 3 நாட்டு தலைவர்களும் வலியுறுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
சமாதான பேச்சுவார்த்தைக்கு புதின் வரமறுத்தால் 3 நாடுகளுக்கும் 100 சதவீத இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தார்.
100 சதவீத இரண்டாம் நிலை தடை என்பது, ஏற்கனவே பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தடையை மீறி அந்த நாட்டோடு வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எதிராக விதிக்கப்படும் மற்றொரு தடையே இரண்டாம் நிலைத் தடை என அழைக்கப்படுகிறது. இதுவும் ஒருவகை பொருளாதார தடை என்பது குறிப்பிடத்தக்கது.