ஒருச்சாமி, ரெண்டுச் சாமி...இது "ஏலியன்" சாமி..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் அருகே ஏலியனுக்கு கோவில் கட்டி, ஒருவர் வழிபட்டு வருகிறார். ஏலியன்கள் தனக்கு உத்தரவிட்டதன் பேரிலேயே இந்த கோவிலை கட்டியுள்ளதாக, அவர் கூறுகிறார். இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம். 

வேற்றுகிரகவாசிகள் எனப் பேசத் தொடங்கி விட்டாலே, ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவுக்கு கற்பனைக் கதைகள் ரெக்கை கட்டி பறப்பது இயல்பு. ஒளியின் வேகத்தில் பயணிப்பது, எதிர்காலத்தை கணிப்பது போன்ற அதீத சக்திகள் ஏலியன்களிடம் இருப்பதாக கதைகளில் கூறப்படுவது வழக்கம். அதேபோல் ஏலியன்களின் பறக்கும் தட்டுகளைப் பார்த்ததாக அவ்வப்போது செய்திகளும் வெளியான வண்ணம் உள்ளது. இந்த நிலையில், சேலம் மாவட்டம் இரும்பாலை சாலையில் உள்ள கிராம கவுண்டனூரைச் சேர்ந்த லோகநாதன் என்பவர், முக்கால் ஏக்கர் பரப்பளவில் ஏலியனுக்கு சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு மேற்கொண்டு வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  சித்தர் பாக்யா இரட்டை ஆருடை சிவலிங்கம் என்னும் திருக்கோவிலை கட்டியுள்ள அவர், 11 அடி ஆழத்தில் அவருடைய குருநாதரான சித்தர் பாக்யா ஜீவசமாதி அருகே ஏலியன் சித்தர் மற்றும் அகஸ்தியரின் சிலையை நிறுவி வழிபட்டு வருகிறார். மாதந்தோறும் தேய்பிறை மற்றும் வளர்பிறை பஞ்சமி திதியில் மாலை 6 மணி அளவில் பூஜைகளும் செய்து அன்னதானம் வழங்கி வருகிறார்.

ஏலியனுக்கு சிலை அமைத்து வழிபடுவது குறித்து பேசிய லோகநாதன் என்னும் சித்தர் பாக்யா, சக்தி தேவி பார்வதி தேவி சிவன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒருங்கிணைந்த இரட்டை ஆருடை சிவலிங்கம் இங்கு அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்ததாகவும்,  அப்போது ஏலியன் சித்தர் எனது உடலில் தோன்றி சிலை அமைக்க உத்தரவு வழங்கியதாகவும் அதன் பின்னரே எனது குருநாதர் ஆன சித்தர் பாக்யா ஜீவசமாதி அடைந்த அதே இடத்தில் ஏலியன் சித்தர் மற்றும் அகஸ்தியர் ஆகியோரை நிறுவி உள்ளதாக தெரிவித்தார்.

உலகத்தை அழிவில் இருந்து காக்கும் ஒரே தெய்வம் ஏலியன்கள் தான் என அடித்துக் கூறும் லோகநாதன், ஏலியன் சித்தரை வழிபட்டால், தொழில்தடை, குடும்ப பிரச்சனை, குழந்தையின்மை உள்ளிட்ட 60 பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் எனக் கூறுகிறார்

மேலும் பேசிய அவர், இனிமேல் பூமிக்கு ஏலியன்களின் வருகை அதிகரிக்கும் என்றும், அவர்களிடம் பல அபூர்வ சக்திகள் இருப்பதாகவும் கூறி மனமுருக ஏலியனை வழிபட்டார். 

Night
Day