தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 3 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று,  நீலகிரி மற்றும் கோவை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.  12 சென்டி மீட்டர் முதல் 20 சென்டி மீட்டர் வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் வரும் 18, 19, 20 ஆகிய 3 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இதேபோன்று, இன்று முதல் அடுத்த 5 நாட்கள் அதாவது வரும் 22ம் தேதி வரை காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே, வரும் 24ஆம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய வங்கதேசம் மற்றும் மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான அடுத்த 3 நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து மேற்குவங்கம், வடக்கு ஒடிசா அதனை ஒட்டிய ஜார்க்கண்ட், தெற்கு சட்டீஸ்கர் வழியே நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Night
Day