பயங்கரவாதத்துக்‍கு எதிராக இந்தியாவின் கொள்கை மிக உறுதியாக இருக்‍கிறது - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பயங்கரவாதத்தை ஒழிப்பதில், அனைத்து நாடுகளுக்‍கும் இருவேறு​ நிலைப்பாடுகளுடன் ஒருபோதும் இருக்‍கக்‍ கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி ஜி7 உச்சி மாநாட்டில் உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

3 நாடுகள் அரசு முறைப் பயணத்தின் முதல் கட்டமாக சைப்ரஸ் பயணத்தை முடித்த பிரதமர் மோடி, 57வது ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா சென்றார். அங்குள்ள கல்கரி விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கனனாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி 7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். 

அதில் பயங்கரவாதத்தை ஆதரித்து ஊக்‍குவிக்‍கும் நாடுகளுக்‍கு எதிராக உறுதியான கடும் நடவடிக்‍கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உலகளவில் அமைதி மற்றும் வளர்ச்சியை அடைய வேண்டுமானால் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்‍கும் நாடுகளுக்கு, அதற்குரிய விலையை தர வேண்டும் என்பதில் இந்தியாவின் கொள்கை மிக உறுதியாக இருப்பதாக குறிப்பிட்டார். 

பயங்கரவாதத்தை ஊக்‍குவிக்‍கும் ஒருசில நாடுகள் மீது பல்வேறு தடைகளை விதிப்பதும், பயங்கரவாதத்தை ஆத​ரிக்‍கும் மற்ற சில நாடுகளுக்‍கு பரிசு அளிப்பதையும் ஒருபோதும் ஏற்க முடியாது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். பஹல்காம் பயங்கரவாத தாக்‍குதலுக்‍கு எதிரான இந்தியாவின் நடவடிக்‍கைக்‍கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அளித்த ஆதரவுக்‍கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

உலகின் தெற்கில் உள்ள நாடுகளில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்‍கு தீர்வு காண்பது, முன்னுரிமை அளிப்பது குறித்தும் பிரதமர் மோடி சுட்டிக்‍காட்டினார். உலக அரங்கில் தெற்கு நாடுகளில் உள்ள பிரச்னைகள் குறித்து இந்தியா தொடர்ந்து குரல் எழுப்பும் என்று தெரிவித்தார். 

​எரிசக்‍தி பாதுகாப்பு, பசுமை எரிசக்‍தி, புதுப்பிக்‍கத்தக்‍க எரிசக்தி மற்றும் சர்வதேச அளவிலான சூரிய சக்‍தி போன்றவை குறித்தும் பிரதமர் மோடி பேசினார். முன்னதாக ஜி 7 மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்த கனடா பிரதமர் மார்க்‍ கார்னிக்‍கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

Night
Day