எத்தியோப்பிய எரிமலை வெடிப்பு - 11 வழித்தடங்களில் ஏர் இந்தியா விமான சேவை ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எத்தியோப்பியாவில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு எரிமலை வெடிப்பு காரணமாக, வளிமண்டலத்தில் பரவும் சாம்பல் புகை இந்தியாவை நோக்கி வருவதால், சுமார் 11 வழித்தடங்களில் விமானங்களை ரத்து செய்வதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் அபார் மாகாணத்தில் ஹேலி குப்பி என்ற எரிமலை, 10 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்தது. இதனால் சாம்பல் புகை வெளியேறி பல நூறு மைல்களுக்கு வான்வெளியில் பரவியுள்ளது. எரிமலை சாம்பல் வளிமண்டலத்தில் பரவி செங்கடல், ஏமன், ஓமன் வழியாக இந்தியாவை நோக்கி மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றன. 

சாம்பல் புகை பரவியுள்ள பகுதிகளில் விமானங்களை இயக்குவதை தவிர்க்குமாறு விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த அறிவிப்பின்படி, இன்றும், நாளையும் இயக்கப்பட வேண்டிய 11 விமானங்களை ரத்து செய்வதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மாற்று பயண ஏற்பாடு செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, ஆகாசா ஏர், இண்டிகோ, கேஎல்எம் நிறுவனங்களும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.

இதனிடையே எரிமலையின் சாம்பல் புகை குஜராத் மாநிலத்திற்குள் நுழைந்து ராஜஸ்தான், மேற்கு மகாராஷ்டிரா, டெல்லி, அரியானா, பஞ்சாப் நோக்கி இரவு 10 மணிக்குள் நகரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Night
Day