எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் சரமாரித் தாக்குதலில் 585 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்து 326 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த ஈரான், இஸ்ரேல் இடையிலான மோதல் 6வது நாளாக நீடித்து வருகிறது. இரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேல் கடந்த 13 ஆம் தேதி திடீரென ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
தலைநகர் டெஹ்ரான் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் அணு ஆயுத கட்டமைப்புகளை குறி வைத்தும் போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி இஸ்ரேல் தாக்கி வருகிறது. இந்த தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் மூத்த தளபதிகள், அணு ஆயுத விஞ்ஞானிகள், புரட்சிகர படைகளை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு நாடுகளும் மாறி, மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த 585க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆயிரத்து 326 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர்கள் குழு ஈரானில் பலியானவர்களில் 239 பேர் பொதுமக்கள் என்றும், 126 பேர் பாதுகாப்பு பணியாளர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்துள்ளது.