எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருப்புவனம் லாக்கப் மரணம் தொடர்பான வழக்கில் விளம்பர திமுக அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி முழுமையாக விசாரணை நடத்தி வரும் 8ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு விசாரித்து வருகிறது.
விசாரணையின் போது, இளைஞர் அஜித் குமார் தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ நீதிபதிகள் முன் காண்பிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகளைக் கொண்டு இளைஞர் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டு, அது தொடர்பான வீடியோக்களை வழக்கறிஞர் ஹென்றி தாக்கல் செய்தார்.
அப்போது வாதிட்ட வழக்கறிஞர் ஹென்றி, இளைஞர் அஜித் குமார் இறந்ததாக தெரிவிக்கப்பட்ட திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அங்கிருந்தே விசாரணை தொடங்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அவரது உடல் எதற்காக மதுரை கொண்டு வரப்பட்டது என்பது சந்தேகத்தை எழுப்புவதாக கூறினார். தாக்குதல் நடத்தும் போது சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்து உள்ளார் - மானாமதுரை டிஎஸ்.பி யின் சிறப்புப் படையைச் சேர்ந்த தலைமை காவலர் கண்ணன், திருப்புவனம் வந்து விசாரித்தது விதிமீறல் என்றும் வழக்கறிஞர் ஹென்றி வாதிட்டார்.
திமுகவை சேர்ந்த பஞ்சாயத்து தலைவியின் கணவர் சேங்கைமாறன், திருப்புவனம் திமுக செயலாளர் மகேந்திரன், காளீஸ்வரன், மானாமதுரை டி.எஸ்.பி காளீஸ்வரன் ஆகியோர், அஜித் குமார் இறந்த பின்பு 50 லட்சம் ரூபாய் தருவதாக அவருடைய குடும்பத்திடம் சமரசம் பேசியதாகவும் வழக்கறிஞர் ஹென்றி குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் நீதிபதிகள் காட்டமான கேள்விகளை முன்வைத்தனர்.
அப்போது, காவல்துறை அடிப்பதற்கு அல்ல புலனாய்வு செய்யவே என்று கூறிய நீதிபதிகள், உயர்அதிகாரிகளை காப்பாற்ற உண்மைகளை மறைக்க கூடாது என்று கூறினர். 2 நாட்களாக வேறு வேறு இடங்களுக்கு கொண்டு சென்று அஜித் குமாரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டது யார் என்றும், காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்காமல் வெளியே வைத்து விசாரித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.
சிறப்புப்படை எந்த அடிப்படையில், யார் சொல்லி இந்த வழக்கை கையிலெடுத்தனர்? யார் இந்த வழக்கை ஒப்படைத்தனர்? அவர்களாகவே இந்த வழக்கை கையிலெடுத்து விசாரிக்க முடியுமா? உயர் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக முழுமையான விபரங்களை மறைக்கக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தவறு செய்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காட்டமாக தெரிவித்த நீதிபதிகள், உயர் அதிகாரிகளின் சட்ட விரோத கட்டளைகளுக்கு காவலர்கள் பணியக் கூடாது என்று கூறினர். யார் உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணை நடத்தப்பட்டது என டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், முழு உண்மையையும் தமிழக அரசு மறைப்பதாகவும், அஜித் குமார் உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினர்.
அஜித் குமார் மரண விவகாரத்தில் எஸ்-பியை சஸ்பெண்ட் தானே செய்திருக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், மாறாக அவரை அவசரம் அவசரமாக இடம் மாற்றம் செய்தது ஏன், அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டியதுதானே என்றும் அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
அஜித் குமாரின் உடற்கூராய்வு அறிக்கையை உடனடியாக மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பாதது ஏன் என்று கேட்ட நீதிபதிகள், மக்களைக் காக்கவே, அவர்களது நலனுக்கே காவல்துறை என்பதை காவல்துறையினர் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறினர். தமிழகம் அதிக கல்வியறிவு கொண்ட மக்களைக் கொண்ட மாநிலம். இருப்பினும் இது போல் நிகழ்வது ஏற்கத்தக்கதல்ல என்றும் கூறிய நீதிபதிகள், அஜித் குமார் உடற் கூராய்வு அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வருக்கு உத்தரவிட்டு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.
பிற்பகலில் வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கிய நிலையில், திருப்புவனம் நீதிமன்ற நடுவர் வெங்கடாபதி பிரசாத், கோயில் உதவி ஆணையர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி டீன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அப்போது, அஜித்குமார் உடலின் பிரேதப் பரிசோதனை இடைக்கால அறிக்கையை மருத்துவக் கல்லூரி டீன் தாக்கல் செய்தார். அறிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், இளைஞர் அஜித்குமார் உடலில் 44 காயங்கள் இருப்பதாகவும், அரசு தன் குடிமகனையே கொலை செய்திருப்பதாகவும் காட்டமாக தெரிவித்தனர்.
மேலும், பதவி ஆணவத்தில் காவலர்கள் கடுமையாக தாக்கியிருப்பதாகவும், அஜித்குமார் இறக்கும் வரை, எதற்காக விசாரிக்கப்பட்டார் என்பதற்கு FIR பதிவு செய்யப்படாதது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இறுதியாக மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், இந்த விவகாரம் தொடர்பான முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும், அது தொடர்பான அறிக்கையை ஜூலை 8ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசுத்தரப்பில் இதற்கு காரணமான உயரதிகாரிகள் முதற்கொண்டு அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும், திருப்புவனம் காவல் ஆய்வாளர், சிவகங்கை எஸ்.பி, விசாரணை அலுவலர், சிறப்புப்படையினர் ஆகியோர் வழக்கு தொடர்பான சிசிடிவி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் விசாரணை நீதிபதியிடம் நாளை வழங்க வேண்டும் என ஆணையிட்ட நீதிபதிகள், மாவட்ட நீதிபதி அனைத்து ஆவணங்களையும் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பாதுகாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.