அமெரிக்க அதிபர் டிரம்ப் - நெதன்யாகு இடையே பேச்சுவார்த்தை வெற்றி - காசா போர் நிறுத்த திட்டத்துக்கு இஸ்ரேல் சம்மதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க அதிபர் டிரம்ப் - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகிய இருவரும் வெள்ளை மாளிகையில் மேற்கொண்ட காசா அமைதி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்தது.

இஸ்ரேலில் ஹமாஸ் படையினர் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் இருந்து சுமாா் 200 பேரை பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனர். அதனைத் தொடர்ந்து, அதற்கான எதிர்வினையாக இஸ்ரேல் படைகள், காஸாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கிய தாக்குதல்கள், இன்றளவும் தொடருகின்றன. 

இதில் இதுவரை 64 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனா். 1 லட்சத்து 64 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனா். இஸ்ரேலின் தீவிர தாக்குதல்களால் காஸா உருக்குலைந்துள்ளது.

இந்த நிலையில், காஸாவில் அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்ட பல கட்ட முயற்சிக்குப்பின்,  வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸா போர் நிறுத்தத்துக்காக அதிபர் டிரம்ப்பால் முன்மொழியப்பட்ட முக்கியமான 21 நிபந்தனைகளை உள்ளடக்கிய விரிவானதொரு திட்டத்தை ஏற்றுக்கொண்டார். அடுத்தகட்டமாக, ஹமாஸ் தரப்பின் சம்மதத்தை எதிர்நோக்கி சர்வதேச சமூகம் காத்திருக்கின்றது. 

தொடர்ந்து, இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அதிபர் டிரம்ப், நெதன்யாகுவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், வரலாற்றில் இது முக்கியத்துவம் வாய்ந்தவொரு நாள் என்று குறிப்பிட்டார். பின்னர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசும்போது, இஸ்ரேல் சுட்டிக்காட்டியிருந்த முக்கியமான 5 நிபந்தனைகளை அந்தத் திட்டத்தில் உள்ளடக்கியதைத் தொடர்ந்து, அதனை ஏற்றுக் கொண்டிருப்பதாக் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், காஸா போர்நிறுத்தம் தொடர்பாக மத்தியஸ்தம் செய்யும் முதன்மை நாடுகளான கத்தாரும், எகிப்தும் ஹமாஸ் தரப்பிடம் அமைதித் திட்டம் குறித்து எடுத்துரைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஹமாஸ் தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ள பதிலில், இந்தத் திட்டத்தை சீராய்வு செய்து அதன்பின் நல்லதொரு முடிவை தெரிவிப்பதாக மத்தியஸ்தர்களிடம் தெரிவித்துள்ளது.

Night
Day