முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளநிலையில் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று தனது பதவிய ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் தற்போதைய ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் பெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடங்கியுள்ளது. 

அதன்படி, இன்று கூடும் தற்போதைய அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றமும் ஆட்சிக் கலைப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர் ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கவுள்ளதாக தெரிகிறது. பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.

இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐந்து கட்சிகளும் அமைச்சரவையில் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. 6 எம்எல்ஏ-க்களுக்கு ஒரு அமைச்சர் பதவி என்ற கணக்கீட்டில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 15 அமைச்சர்களும் பாஜகவுக்கு 16 அமைச்சர்களும் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிக்கு 3 அமைச்சர்களும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, மற்றும் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியும் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. வரும் 19 அல்லது 20ம் தேதிகளில் பதவியேற்பு விழா காந்தி மைதானத்தில் நடைபெறும் என்றும் இதில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

Night
Day