டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் நேற்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

டெல்லி புதிய மதுபானக் கொள்கையில் நடைபெற்ற முறைகேடு குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. தொடர்ந்து  9 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த நிலையில், கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய பிறகும், அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியதால், டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் புதிய மனுவை தாக்கல் செய்தார். அதில் தான் விசாரணைக்கு ஆஜரானால் கைது செய்ய மாட்டோம் என அமலாக்கத்துறை உறுதியளிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்ததுடன், கெஜ்ரிவால் கோரிக்கையின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனவும் தெரிவித்தார். அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை விதிக்க டெல்லி நீதிமன்றம் மறுத்ததை அடுத்து, கெஜ்ரிவால் வீட்டில் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். 2 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்கு பின்னர் கெஜ்ரிவால் நேற்று இரவு 9 மணியளவில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து அவரது இல்லத்தின் முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், டெல்லி முதல்வர் வீடு உள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தரப்பு இரவோடு இரவாக உச்சநீதிமன்றத்தை நாடியதுடன், வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுக்குமாறு முறையிட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் நேற்று முறையீடு செய்த பிரபல வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டதை அடுத்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

Night
Day