தருமபுரியில் தேர்தல் மன்னன் பத்மராஜன் 239-வது முறையாக வேட்பு மனுதாக்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. பலர் அவர்களுக்கே உரிய பாணியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். விநோத வேட்பாளர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தங்களது வேட்பு மனுக்களை அவர்களுக்கே உரிய பாணியில் தனித்துவமாக தாக்கல் செய்து வருகின்றனர்.

தருமபுரியில் தேர்தல் மன்னன் பத்மராஜன் 239-வது முறையாக வேட்பு மனுதாக்கல் செய்தார். இவர் இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் பலமுறை போட்டியிட்டு லிம்கா, புக் ஆஃப் ரிக்கார்டு போன்ற சாதனைப் புத்தகங்களில் இடம்பிடித்துள்ளார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக சுயேட்சை வேட்பாளர் நூதன முறையில் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஓட்டுக்கு பணம் பெறுவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சங்கரபாண்டியன் என்பவர், தூக்கு கயிற்றில் பணத்தை தொங்கவிட்டபடி கொண்டு சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட முதல் நபராக பட்டதாரி இளைஞர் சிவனேஸ்வரன் வேட்புமனு தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமானோர் வேட்புமனு படிவத்தை பெற்று சென்றனர். வேட்புமனு விநியோகத்தையொட்டி ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. 

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் முதல் ஆளாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்த சமூக ஆர்வலரும் காந்தியவாதியுமான ரமேஷ் காந்தி, டெபாசிட் தொகையான 25 ஆயிரம் ரூபாயை 10 ரூபாய் நாணயமாக கொண்டு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கள்ளக்குறிச்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகதீசபாண்டியன், அம்பேத்கர், திருவள்ளுவர், வேலு நாச்சியார் உள்ளிட்ட வேடங்களை அணிந்தவர்களுடன் ஊர்வலமாக வந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

திருச்சி தொகுதியில் போட்டியிடுவதற்காக ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் ராஜேந்திரன், நூதன முறையில் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது இந்தியாவில் வேட்பாளர்கள் பணம் செலுத்த டிஜிட்டல் முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, கிரெடிட் கார்ட், ஏடிஎம் கார்டுகளை மாலையாக அணிந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக சுயேட்சை வேட்பாளர் நூர்முகமது, ஜனநாயகம் இறந்துவிட்டது என்பதை குறிப்பிடும் வகையில், சவப்பெட்டியுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஏற்கனவே 41 முறை வேட்புமனு தாக்கல் செய்ததாக கூறிய அவர், 42வது முறையாக பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். 

Night
Day