சதுப்பு நிலத்தில் எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பள்ளிக்கரணை சதுப்புநிலம் என கூறப்படும் பகுதியில் ஆயிரத்து 400 குடியிருப்புகள் கட்ட சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இது சட்ட விரோதமானது என்றும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி எந்த கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிடக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இவ்வழக்கு விசாரணையின்போது, பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் கட்டப்படும் கட்டிடத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், அனுமதி வழங்கி உள்ளதாகவும், சதுப்பு நிலத்தின் எல்லையை துல்லியமாக தீர்மானிப்பது குறித்த ஆய்வு பணிகள் இரண்டு வாரங்களில் முடிவடையும் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. 

வாதத்தை கேட்ட நீதிபதிகள், உச்சநீதிமன்ற உத்தரவுகள், பசுமை தீர்ப்பாய உத்தரவுகள் தெரியாமல் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சதுப்பு நிலத்தில் குடியிருப்புகளை கட்ட அனுமதி வழங்கியது எப்படி? எனவும், சதுப்புநிலத்தின் எல்லையை தீர்மானிக்கும் முன்பு கட்டுமான பணிக்கு சிஎம்டிஏ எவ்வாறு அனுமதி வழங்கலாம் என்றும் கேள்வி எழுப்பினர். மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கட்டுமான பணிகளை மேற்கொள்ள நீதிபதிகள் தடை விதித்ததுடன், இதுதொடர்பான வழக்கு மீது வரும் நவம்பர் 12ம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

Night
Day