தேசிய ஒற்றுமை தினம் - சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர்தூவி மரியாதை செலுத்தினார். குஜராத்தில் உள்ள வல்லபாய் படேலின் பிரம்மாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செய்தார்.

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும், இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவருமான சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வல்லபாய் படேலின் பிறந்தநாளை தேசிய ஒற்றுமை தினமாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இதன்படி, வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்படும் தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம் கெவாடியா அருகே நர்மதை ஆற்றங்கரையில் உள்ள உலகின் உயரமான சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவியும் புனிதநீர் ஊற்றியும் மரியாதை செய்தார். அப்போது சர்தார் வல்லபாய் படேலின் பிரம்மாண்ட சிலைக்கு ஹெலிகாப்டர்களில் இருந்து மலர்கள் தூவப்பட்டது.

பின்னர், பிரதமர் மோடி தலைமையில் ஒற்றுமை தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பு படையினரின் பிரம்மாண்ட அணி வகுப்பு நடைபெற்றது. குஜராத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சிம்ரன் பரத்வாஜ் தலைமையில் பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, இந்தோ திபெத் எல்லை போலீசார், எஸ்எஸ்பி படை வீரர்களுடன் ஆந்திரா, அசாம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில போலீசார் பங்கேற்ற அணிவகுப்பை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

அணிவகுப்பில் பூர்வீக நாய் இனங்களான ராம்பூர் ஹவுண்ட்ஸ் மற்றும் முதோல் ஹவுண்ட்ஸ் அடங்கிய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த நாய் படை, திறனை வெளிப்படுத்தியது. அசாம் காவல்துறையின் மோட்டார் சைக்கிள் டேர்டெவில் ஷோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்ந்து நடைபெற்ற அலங்கார ஊர்திகளின் அணி வகுப்பில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருப்பொருளை பிரதிபலிக்கும் ஜம்மு & காஷ்மீர், அந்தமான் & நிக்கோபார் தீவுகள், மணிப்பூர், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரகாண்ட் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஊர்திகள் கலந்து கொண்டன. கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

பிரம்மாண்ட அணிவகுப்பின் ஒரு பகுதியாக நடைபெற்ற விமான சாகசம் காண்போரை மெய்சிலிக்க வைத்தது. இந்திய விமானப்படையின் சூர்யா கிரண் ஏரோபாட்டிக் குழு, தேசிய கொடியின் மூவர்ணத்தை வானில் வெளிப்படுத்தி செய்த சாகசங்களை பிரதமர் மோடி கைதட்டிப் பாராட்டினார்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, சுதந்திரத்திற்குப் பிறகு சாத்தியமற்றது போல் தோன்றிய 550க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் பணியை சர்தார் படேல் நிறைவேற்றினார் என்று கூறினார். அவருக்கு, ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையே பிரதானமாக இருந்தது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இன்று கோடிக்கணக்கான மக்கள் ஒற்றுமைக்கான சபதம் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.  தேசத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தும் இத்தகைய செயல்களை ஊக்குவிக்க தீர்மானித்துள்ளதாகவும் தேசத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும் ஒவ்வொரு சிந்தனையையும் செயலையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

காங்கிரஸின் பலவீனமான கொள்கைகள் காரணமாக, காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் வந்ததாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, காங்கிரஸ் எப்போதும் பயங்கரவாதத்தின் முன் தலைவணங்கியதாகவும், சர்தார் வல்லபாய் படேலின் தொலைநோக்குப் பார்வையை காங்கிரஸ் மறந்துவிட்டதாகவும் சாடினார். காஷ்மீர் இன்று முக்கிய நீரோட்டத்தில் இணைந்துள்ளதாகவும் ஆபரேசன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானும் பயங்கரவாதத்தின் சூத்திரதாரிகளும் கூட நாட்டின் உண்மையான சக்தியை உணர்ந்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். 

Night
Day