காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


தேர்தலில் வெற்றியோ! தோல்வியோ! ஆனால் நம் உழைப்பு கடுமையாக இருக்க வேண்டும் என்பது போல ஆளும் பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய வகையில் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது! அப்படி என்ன தேர்தல் அறிக்கை! அதில் என்ன சிறப்பு அம்சம்! விரிவாக பார்க்கலாம்....

இந்தியாவில் இது கோடை காலம் என்பதை விட தேர்தல் காலம் என சொல்லலாம்..எங்கு பார்த்தாலும் கட்சி கொடிகள், கரை வேஷ்டிகள், கலகலப்பான பிரச்சாரங்கள் என கடைநிலை தொண்டனும் கட்சியின் வெற்றிக்காக அயராது உழைத்து வருகிறார்கள். ஒரு கட்சியின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது, ஆளும் கட்சி மீதான அதிருப்தி என்பதையும் தாண்டி கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் தான். அப்படி கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி, நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளது. 48 பக்கங்கள் கொண்ட 25 தலைப்புகளில் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது என கூறலாம். மக்களுக்கு புதிய திட்டங்களை கொடுப்பதை விட மக்களுக்கு உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதை ஒரு அரசியல் கட்சியின் சிறந்த திட்டம் என்பதை காங்கிரஸ் கட்சி நிரூபணமாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தனி ஒரு மனிதனும் அரசியல் கட்சிகளும் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய வகையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையாக உள்ளது. அப்படி காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கியமான வாக்குறுதிகளை பார்க்கலாம்...

1. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் - மீனவ சமுதாயங்கள் சாதி மாறி கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டு அடையாள அட்டை வழங்கப்படும்.

2. எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டின் 50 சதவீதம் வரம்பை உயர்த்துவதற்கான அரசியல் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

3. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு அனைத்து சாதிகள் மற்றும் சமூகங்களுக்கும் செயல்படுத்தப்படும்.

4. எஸ்சி ,எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கான உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும். எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களுக்கு வெளிநாட்டில் படிக்க உதவித்தொகை வழங்கப்படுவதோடு முனைவர் படிப்புக்கான உதவித்தொகை இரட்டிப்பாக்கி வழங்கப்படும்.

5. காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பேற்ற ஓர் ஆண்டில் அரசு பணியிடங்களில் காலியாக உள்ள எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசி பதவிகள் நிரப்பப்படும்.

6. பணியில் உள்ள துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுவதோடு, இறப்பு சான்றிதழ் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

7. அரசியலமைப்பின் 8வது அட்டவணையின் கீழ் அதிக மொழிகள் சேர்க்கப்பட வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படும்.

8. மூத்த குடிமக்கள், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

9. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில் பயணிகளுக்கான சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்

10. அரசு பள்ளிகளில் வசூலிக்கப்படும் குறைந்தபட்ச கட்டண தொகையும் ரத்து செய்யப்பட்டு முழுவதும் இலவச கல்வியாக வழங்கப்படும். 

11. தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க “கட்டண கொள்கை குழு” அனைத்து மாநிலங்களிலும் உருவாக்கப்படும்.

12. வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் தோறும் பத்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

13. ‘ மகாலட்சுமி’ திட்டத்தின் கீழ் தேசிய அளவில் ஏழை குடும்பங்கள் கண்டறியப்பட்டு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

14. நிறுவனங்களில் பெண்களுக்கான ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுவதை தடுக்க “ஒரே வேலை ஒரே ஊதியம்” என்பது நடைமுறைப்படுத்தப்படும்.

15. திருமணம், வாரிசுரிமை, தத்தெடுத்தல் போன்றவைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் களையப்படும்.

16. புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கு மத்திய அரசு நிதி பங்களிப்புடன் மாநிலங்களில் தங்கும் இடம் கட்டப்படும். நாடு முழுவதும் உள்ள பெண்கள் விடுதிகள் இரட்டிப்பாக்கப்படும்.

17. நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் கல்லூரி மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி நிறுவப்படும்.

18. நாடு முழுவதும் மீனவர்கள் நலன் கருதி கடற்கரையோரங்களில் மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்கப்படும்.

19. மீனவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் கைது நடவடிக்கை, படகு பறிமுதல், உயிரிழப்பு உள்ளிட்டவற்றை தடுக்க கடல் எல்லையை பகிர்ந்து கொள்ளும் அண்டை நாடுகளுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும்.

20. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் ஊதியம் 400 ரூபாயாக ஆக உயர்த்தி வழங்கப்படும்.

21. புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ரேஷன் அட்டைதாரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு ரேஷன் கடைகளில் பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்படும்.

22. பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட நான்கு ஆண்டுகள் இராணுவத்தில் பணி செய்யும் அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்படும்.

23. உணவு, உடை, காதல் திருமணம் செய்து கொள்வது உள்ளிட்ட தனி மனித சுதந்திரங்களில் உள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படும், இது தொடர்பாக உள்ள அனைத்து சட்ட விதிகளும் ரத்து செய்யப்படும்.

24. ஆண்டுக்கு 100 நாட்கள் நாடாளுமன்றம் கூடும்; நாடாளுமன்றத்தின் அவைத்தலைவர்கள் அரசியல் சார்பின்றி சமநிலையுடன் நடந்து கொள்வது உறுதி செய்யப்படும்.

25. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழங்கும் நிகழ்ச்சி நிரல் வாரத்தில் ஒரு நாட்கள் கடைபிடிக்கப்படும்.

26. நாட்டிலுள்ள துணைநிலை மாநிலங்களுக்கு (யூனியன் பிரதேசம்) மாநில அந்தஸ்து வழங்கப்படும். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

27. பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவர்களில் யாருடைய வழக்குகள் எல்லாம் முடித்து வைக்கப்பட்டதோ அவை மீண்டும் விசாரிக்கப்படும்.

28. உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் எஸ்சி , எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவு பெண்கள் அதிக அளவில் நியமிக்கப்படுவார்கள்.

29. இந்திய சீன எல்லைகளில் அமைதியை நிலை நாட்ட கவனம் செலுத்தப்படுவதோடு, இழந்த இந்திய பகுதிகள் மீட்கப்படும்.

30. வேலையில்லா திண்டாட்டத்தின் காரணமாக 2024 மார்ச் 15ம் தேதி நிலவரப்படி, மாணவர்கள் கல்வி கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். அதற்குத் தேவையான இழப்பீட்டை மத்திய அரசு வங்கிகளுக்கு வழங்கும்.

31. தேர்தல் பத்திரம் ஊழல், பி.எம்.கேர்ஸ் ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும்.

32. 2014-2024 இடைப்பட்ட 10 ஆண்டுகளில் பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள் திரும்ப பெறப்படும்.

33. அரசு தேர்வுகள் மற்றும் அரசு பதவிகளுக்கான விண்ணப்ப கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதோடு பொது மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளை கண்காணிக்க தனி ஆணையம் உருவாக்கப்படும்.

34. மீனவர்களுக்கான டீசல் மானியம் பழைய முறைப்படி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

35. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரை நிறைவேற்றப்படும்.

36. கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்கள் கல்வி கற்பித்தலை தவிர வேறு வேலைகளில் ஈடுபடுத்தப்படுவது முற்றிலும் நிறுத்தப்படும்.

37. தேசிய கல்விக் கொள்கை மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து மறு ஆய்வு செய்யப்படும்.

38. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நாட்டில் அமல்படுத்தப்பட மாட்டாது.

39. கல்வி நிலையங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகுவதை தடுக்க ‘ரோஹித் வெமுலா சட்டம்’ கொண்டுவரப்படும்.

40. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் மூன்று ஆண்டுகளில் முழுவதுமாக நிரப்பப்படும்.

41. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறைக்கான நிதியின் அளவு ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தப்படும்.

இப்படியான, மக்களுக்கான கவர்ச்சிகர வாக்குறுதிகளை மக்களால் எதிர்க்கப்பட்ட திட்டங்களையும் முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் தங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என தெரியாமல் வேண்டுமானால் இருக்கலாம்! ஆனால் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தங்களின் இலக்கும், திட்டமும், இவைதான் என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஜெயா பிளஸ் செய்திகளுக்காக சிறப்பு செய்தியாளர் யோகேஸ்வரன்.

Night
Day