பீகாரில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பாரத ரத்னா கர்பூரி தாக்கூர் சிலைக்கு மரியாதை செலுத்தி, பீகார் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி துவக்கினார்.

மொத்தம் 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு வரும் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 14ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க் கட்சிகளின் இந்தியா கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது. 

இந்நிலையில், பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட பிரச்சாரத்தை பிரதமர் மோடி இன்று துவக்கினார். இதற்காக இன்று காலை அங்குள்ள சமஸ்திபூருக்கு வருகை தந்த அவர், பாரத ரத்னா கர்பூரி தாக்கூர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் கர்பூரி தாக்குர் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உடனிருந்தார்.

தொடர்ந்து நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மாபெரும் ஜனநாயக திருவிழாவின் மேளம் பீகாரில் ஒலிக்கத் துவங்கி விட்டதாக கூறினார். மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் என பீகார் முழுவதும் மக்கள் கூறத் துவங்கி விட்டதாக தெரிவித்த அவர், மக்களின் தலைவரான கற்பூரி தாக்கூரால் ஈர்க்கப்பட்டு, பீகாரில் நல்லாட்சி வழங்கி வருவதாக கூறினார். ஆனால், காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி-யை சேர்ந்தவர்கள் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டு ஜாமீனில் வெளியே இருப்பதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, இந்த முறை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி அதன் முந்தைய வெற்றி சாதனைகளை முறியடிக்கும் என்று கூறினார். பீகார் நக்சல்கள் இல்லாத மாநிலமாக மாறும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

Night
Day