எழுத்தின் அளவு: அ+ அ- அ
கேரளா மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்த பிரதமர் மோடி, இந்திய கடல்சார் பலத்தின் அடையாளமாக விழிஞ்சம் துறைமுகம் விளங்கும் என்று தெரிவித்தார்.
திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் துறைமுகத்தை அதானி நிறுவனம், பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் 8 ஆயிரத்து 867 கோடி ரூபாய் செலவில் அமைத்துள்ளது. இங்கு பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு கடந்தாண்டு டிசம்பர் மாதம் வர்த்தக சான்றிதழ் பெறப்பட்டது. இந்தநிலையில், சர்வதேச துறை முகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
விழிஞ்சம் நாட்டின் முதல் பிரத்யேக சரக்கு பரிமாற்ற துறைமுகமாகும். நாட்டின் முதல் தானியங்கி துறைமுகமும் இதுதான். இங்குள்ள கிரேன்கள் முழுவதும் தானியங்கி வகையை சேர்ந்தது. இதனால் சரக்குகளை விரைவில் கையாள முடியும். இது சர்வதேச கப்பல் வழித்தடத்தில் இருந்து 10 நாட்டிகல் மைல் தொலைவில் உள்ளது. உலகளாவிய கடல்சார் வரைபடத்தில் கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் இடம் பெற்றுள்ளது.
இந்த துறைமுகத்தில் மிகப் பெரிய சரக்கு கப்பல்களை நிறுத்த இயற்கையிலேயே ஆழமான பகுதிகள் உள்ளன. இங்கு மாதத்துக்கு ஒரு லட்சம் சரக்கு கன்டெய்னர்களை கையாள முடியும்.
விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, இந்திய கடல்சார் பலத்தின் அடையாளமாக விழிஞ்சம் துறைமுகம் விளங்கும் என்று தெரிவித்தார். விழிஞ்சம் சர்வதேச ஆழ் கடல் பல்நோக்கு கடல் துறைமுகம் புதிய யுகத்தின் வளர்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டார். விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, காங்கிரஸ் எம்.பி சசி தரூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழிஞ்சம் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பின்னர் பிரதமர் மோடி அங்குள்ள பல்வேறு பகுதிகளை பார்வையிட்டார். தானியங்கி துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் நவீன முறையில் சரக்கு பெட்டகங்கள் கையாளப்படும் விதம் பற்றியும் அங்குள்ள அலுவலர்களிடம் கேட்டறிந்தார். விழிஞ்சம் துறைமுகத்தில் உள்ள கண்காட்சியையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். அவருடன் முதலமைச்சர் பினராயி விஜயனும் உடனிருந்தார்.