ஆந்திராவில் ஆம்னி பேருந்து தீப்பற்றி விபத்து - 25 பேர் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில் ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு 42 பயணிகளுடன் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு புறப்பட்டுச் சென்றது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்னட்டகூரு அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்து திடீரென்று தீப்பற்றி எரிந்தது. பேருந்தின் என்ஜின் பகுதியில் இருந்து பற்றிய தீ கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக பேருந்து முழுவதும் பரவிய கொழுந்து விட்டு எரிந்தது. தீ விபத்தில் பேருந்தில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் அனைவரும் சிக்கிக் கொண்டனர்.

பேருந்து தீ பற்றி எரிந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பயணிகள் அதிர்ச்சியுடன் தவித்த நிலையில், பேருந்தில் இருந்தவர்களில் 12 பேர் அவசரகால வழி மூலம் வெளியில் குதித்து உயிர் தப்பினர் பேருந்துக்குள் சிக்கிக் கொண்டவர்களில் 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த சேர்ந்த தீயணைப்பு படையினர் பேருந்தில் சிக்கி கொண்டிருந்தவர்களையும் இறந்து போனவர்களின் உடல்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தில் பேருந்து முற்றிலும் கருகி சேதமடைந்தது.

இந்நிலையில் தீப்பிடித்த பேருந்தின் அடியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கருகிய நிலையில் கிடந்துள்ளது. இதனால் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதியதை தொடர்ந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் மோட்டார் சைக்கிளில் வந்த நபரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், தீப்பற்றி எரிந்த போது பேருந்தின் கதவுகள் திறக்க முடியாமல் போனதும் உயிரிழப்பு அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கர்நூல் போலீசார், மோட்டார் சைக்கிளில் வந்த நபர் யார் என்பது குறித்தும் விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணையை துவக்கி உள்ளனர்.

ஆந்திரா பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், கர்னூலில் நடந்த ஒரு துயரமான பேருந்து தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கர்னூல் மாவட்டத்தில் பேரழிவை ஏற்படுத்திய பேருந்து தீ விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும், தங்களுடைய அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஆந்திர பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகுந்த வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். இந்த கடினமான நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தமது எண்ணங்கள் இணைந்திருப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Night
Day