தமிழகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற பால்குட ஊர்வலம், கும்பாபிஷேக விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் பால்குட ஊர்வலம், கும்பாபிஷேக விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இதில் பக்‍தர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே முத்துலாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீலைக்காரி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் யாகசாலை பூஜைகளுக்‍குப் பின்னர், கோபுரக்கலசத்தின் மீது ஊற்றி குடமுழுக்‍கு நடத்தப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் பகுதியில் அமைந்துள்ள இரட்டைபிள்ளையார் கோவிலில் சித்ரா பெளர்ணமியையொட்டி அன்னக்‍கொடி விழா விமரிசையாக நடைபெற்றது. திருத்தேரோட்ட நிகழ்ச்சியில் சிவபெருமானுக்‍கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து அலங்கரிக்‍கப்பட்ட தேரில் எழுந்தருளி காட்சி அளித்தார். திரளான பக்‍தர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயிலில் அமைந்துள்ள வைத்தியநாதசுவாமி ஆலயத்தில் லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் பாதயாத்திரையாக வந்து குலதெய்வ வழிபாடு மேற்கொண்டனர். மஞ்சள் தடவிய குச்சியை வீட்டில் வைத்து பூஜித்த பக்‍தர்கள், அதனை பாதயாத்திரையாக கொண்டு வந்து கோயில் கொடிமரத்தில் காணிக்கையாக செலுத்திவிட்டு சுவாமியையும் அம்பாளையும் வழிபட்டனர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வளையபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பைரவர் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 21 அடி உயரமுள்ள மூலவர் ஸ்வர்ண கால பைரவருக்‍கு 11 அடியில் பிரம்மாண்ட திரிசூலம் சாற்றும் பூஜை நடைபெற்றது. திரிசூலத்திற்கு சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டு, ஸ்வர்ண கால பைரவருக்கு சாற்றப்பட்டது. புனித தீர்த்தங்களால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. 

நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில், சித்ரா பௌர்ணமியையொட்டி, தீர்த்தவாரி நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. கைலாசபுரம் மண்டபத்தில் நெல்லையப்ப சுவாமி, அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்‍கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் அமைந்துள்ள ஸ்ரீ மதுரகாளி அம்மன் கோவிலில் சித்திரை பௌர்ணமி விழாவை முன்னிட்டு ஸ்ரீசண்டி மகா ஹோமம் மற்றும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாம பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு, உலக நன்மை வேண்டி குங்கும அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருவிடந்தை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு நித்திய கல்யாண பெருமாள் திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட நிகழ்ச்சி வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது. 

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்ரா பெளர்ணமி விழா விமரிசையாக நடைபெற்றது. மலையேறி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் செண்பகாதேவி அம்மனுக்‍கு பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து மஞ்சள் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள செங்கப்படை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அழகர் கோவிலில், அழகர் கோவில் பொங்கல் மற்றும் கள்ளழகர் வைகையில் எழுந்தருளல் உற்சவம் நடைபெற்றது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அங்குள்ள கருப்பணசாமி மற்றும் முனியப்ப சாமி கோவிலில் வலம் வந்த அழகர், அங்குள்ள ஆற்றில் இறங்கினார். திரளான பக்‍தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து மகிழ்ந்தனர். 

திருப்பூர் சின்னாண்டி பாளையத்தில் உள்ள சித்ரகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமியையொட்டி சித்ரகுப்தருக்கு கலச அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு, சித்ரகுப்தர் கதை வாசித்தல் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து அன்னம் படைத்தல் நிகழ்ச்சி நடைபெற்று மகா தீபாரதனை காட்டப்பட்டது. பொதுமக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திரளான பக்‍தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சித்ரகுப்தரை வழிபட்டனர்.

Night
Day