குலசை தசரா திருவிழா - சூரனை வதம் செய்த முத்தாரம்மன்

எழுத்தின் அளவு: அ+ அ-

உலகப் பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோயில் கடற்கரையில் பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக, தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில், தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சகணக்கான பக்தர்கள் வருகை புரிந்து முத்தாரம்மனை வழிபட்டு செல்கின்றனர். குறிப்பாக, அம்மனை வேண்டி, மாலை அணிவித்து விரதமிருந்து காளி, அம்மன், அனுமன், கிருஷ்ணர், குரங்கு, கரடி என பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு, நள்ளிரவு 12 மணியளவில் கடற்கரையில் பக்தர்கள் வெள்ளத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோயிலுக்கு முன்பாக அம்மன் எழுந்தருளினார்.

முதலில் தன்முகமாக வந்த மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன், அடுத்ததாக யானை, எருது முகத்துடனுன் வந்த சூரனை வதம் செய்தார். பின்னர், சேவல் உருவில் வந்த மகிஷாசூரனையும் வதம் செய்தார். பின்னர், முத்தாரம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் காளி ஜெய் காளி என பக்தர்கள் முழக்கமிட்டனர்.

இதனையடுத்து, சூரசம்ஹார நிகழ்வையொட்டி, குலசேகரன்பட்டினத்திற்கு ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் வழியாக வருகை தந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக வீரபாண்டியபட்டினத்தில் இருந்து திருச்செந்தூர் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

இதற்கிடையில், தசரா திருவிழாவைக் காண்பதற்காக, வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்தனர்.  அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து, பூஜைகள் செய்து முத்தாரம்மனை வழிபட்டனர்.

Night
Day