ஆதிசக்தி முல்லை நாயகி மஹாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகம், தேர்த் திருவிழா மற்றும் தீமிதி திருவிழாக்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள முல்லைவாசல் கிராமத்தில் அமைந்துள்ள ஆதிசக்தி முல்லை நாயகி மஹாமாரியம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலின் கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது. கணபதி ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே உள்ள தென்திருப்பதி என அழைக்கப்படும் திருமலை வையாவூர் அலமேலு மங்கா சமேத பிரசன்னா வெங்கடேஸ்வரா பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி யாக சாலை பூஜைகள் வாஸ்து யாகம் ஆகியவை நடத்தப்பட்டு, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம், பெல் பகுதியில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்தின் 38ம் ஆண்டு தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக, வேலூர் மறை மாவட்ட பரிபாலகர் ஜான் ராபர்ட் மற்றும் அருட்தந்தை தயாளராஜ் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி வழிபாடு நடைபெற்றது. அன்னை மரியாள் குழந்தை இயேசுவை சுமந்தபடி எழுந்தருளி அலங்கரிக்கப்பட்ட தேருடன், கிறிஸ்துவர்கள் பாடல்கள் பாடி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் ஆதினமிளகி அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவில் ஆவாம்பட்டியில் மண்ணால் செய்யப்பட்ட குதிரை, புரவிகள் சிலைகள் செய்யப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அய்யனார் கோயிலில் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கும்பகோணம் அருகே சத்திரம் கருப்பூர் திரெளபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். திருமணம் வரம் வேண்டியும், திருமணம் வேண்டுதல் நிறைவேறியவர்கள் நேர்த்திக்கடனாக வேட்டி, சேலை, வளையல், மஞ்சள், குங்குமம், தாலி ஆகியவைகளை சீர்வரிசையாக கொடுத்து நேர்த்திக் கடனை செலுத்தினர். 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே குண்டூர் 100 அடி சாலை, மல்லிகை நகரில் அமைந்துள்ள மகா கால பைரவநாத சுவாமி திருக்கோயிலின் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கால பைரவநாத சுவாமிக்கு தீபாரதனை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியில் கொண்டைமாலை அம்மன் கோவில் பெரியகுளத்தின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழாவில், பெண்கள் குலவைசத்தம் எழுப்ப, கருடன் வட்டமிட கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி பெரிய மாரியம்மன், மஹாசக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் பால் குடம் எடுத்து வழிபட்டனர். கோயிலை வ்நதடைந்த பக்தர்கள், அம்மனுக்கு பால் அபிஷேகமும், சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனையும் சேவித்து அருள்பெற்றனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள பிள்ளையார் பாளையம் பகுதியில் மாணிக்க விநாயகர் மற்றும் மஹா ருத்ரேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மேளத்தாளங்களுடன் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட  புனித நீர் அடங்கிய கலசம் ராஜ கோபுர விமானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு புனித நீர் ஊற்றி தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஐய்யனாரப்பன் ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக பசுக்களுக்கு கோபூஜை சிறப்பான முறையில் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஐய்யனாரப்பன் மீது ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. புனித நீர் நிறைந்த கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு விமான கலசத்தில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூல விக்ரகத்திற்கு மகா அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கள்ளை கிராமம் பொன்னம்பட்டியில் அருள் பாலித்து வரும் சித்தி விநாயகர், மகா காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றில் இருந்து புண்ணிய நதி தீர்த்தம் கொண்டு வரப்பட்டு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே மூன்று ஊர் மக்கள் ஒன்றுகூடி முத்தாலம்மன் கோவில் திருவிழாவை விமரிசையாக நடத்தினர். இதனை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் வேடமணிந்து பொங்கல் பானைகள் சுமந்து வீதிகளில் வலம் வந்தனர். அப்போது முளைப்பாரி ஊர்வலத்துடன் பெண்கள் ஆட்டம் பாட்டத்துடன் கலந்து கொண்டனர். அங்கிருந்து முத்தாலம்மன் ஊர்வலமாக புறப்பட்டு நடுப்பட்டி, பள்ளப்பட்டி மற்றும் கவுண்டன்பட்டிக்கு சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
varient
Night
Day