தமிழகத்தில் இன்றுமுதல் S.I.R. தொடக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடங்கியது.

தமிழகத்தில் கடந்த 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி வாக்காளர் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இந்த பட்டியல்களுடன் அனைத்து வீடுகளுக்கும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்லப்போவது இல்லை. எந்தெந்த வீடுகளில் 2002 மற்றும் 2005-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதோ அந்த வீடுகளுக்கு மட்டுமே செல்வர்.

அந்த வீடுகளில் யாராவது இருந்தால் அவர்களின் விவரத்தை கேட்டு வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை வழங்குவர். அந்த வீட்டில் 18 வயது நிரம்பியவர்கள் இருந்தால் அதற்குரிய விண்ணப்படிவம் மற்றும் உறுதிமொழி படிவத்தை வழங்குவர். அவற்றை உடனடியாக பூர்த்தி செய்து தரவேண்டிய அவசியம் இல்லை. அடுத்த முறை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வரும் போது ஆவணங்களுடன் அவற்றை சமர்பித்தால் போதும் இதற்காக ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஒரு வீட்டிற்கு 3 முறை வருவர்.

கடந்த 2002 மற்றும் 2005-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெற்றோர், தாத்தா, பாட்டி பெயர்கள் இருந்தால் அதை தெரிவிக்க வேண்டும். உரிய ஆவணங்களை காட்டி டிசம்பர் 9-ம்தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறலாம்.

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வாக்குச்சாவடி முகவர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கான பயிற்சி கூட்டம் எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் நடைபெற்றது. வாக்குச்சாவடி முகவர்களுக்கான பணிகள், பொறுப்புகள் உள்ளிட்டவை குறித்து உதவி தேர்தல் நடந்தும் அலுவலர்கள் பயிற்சி அளித்தனர். இதன் பின்னர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் சேர்ந்து அரசியல் கட்சிகளை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவங்களை வழங்கி வருகின்றனர். எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் 169 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. 2 ஆயிரத்து 543 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தில்லைநகர் பகுதியில் வாக்காளர்களை நேரடியாக சந்தித்து விண்ணப்ப படிவங்களை அலுவலர்கள் வழங்கி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் சரவணன் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். டிசம்பர் 4ம் தேதி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பார்கள்.

நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஐந்து தொகுதிகளிலும்  14 லட்சத்தி 18 ஆயிரத்து 325 வாக்காளர்கள் உள்ள நிலையில், அவர்களை கணக்கிடும் பணி தொடங்கி உள்ளது. இப்பணியில் ஆயிரத்து 440 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர். இதனை வாக்காளர்கள் நிரப்பி ஒரு மாதத்திற்குள் மீண்டும் தங்கள் தங்கள் வீட்டிற்கு வரும் நிலை அலுவலர்களிடம் வழங்கவேண்டும்.  வாக்காளர்களுக்கு விண்ணப்பப் படிவம் வழங்கும்போதும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பெறும்போதும் ஒவ்வொரு விண்ணப்ப படிவமும் செல்ஃபோன் மூலம் ஸ்கேன் செய்வதாக வாக்குச்சாவடி நிலை அலுவலர் தெரிவித்துள்ளார்.

27 லட்சத்து 40 ஆயிரத்து 631 வாக்காளர்கள் கொண்ட மதுரை மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்ததிற்கான பணிகள் தொடங்கப்பட்டன. மாவட்டம் முழுவதிலும் 3 ஆயிரத்து 396 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத்திகுளம் பகுதியில் தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டது.

Night
Day