திருச்செந்துார் கோயிலில் கோலாகலமாக நடந்த சூரசம்ஹாரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவை லட்சக்கணக்கான பக்தர்கள் பார்த்து மெய்சிலிர்க்க முருகனை வழிபட்டனர்.
 
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கடந்த 22 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. நாள்தோறும் முருகப்பெருமான் வள்ளி தெய்வானைக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் செய்யப்பட்டன. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு 6 நாட்கள் கடும் விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலில் குவிந்து கடலில் நீராடி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். 

மாலை 4.30 மணிக்கு கந்த சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுப்பிரமணியசாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. கஜமுகம், சிங்கமுகம், சூரமுகத்தை சுப்பிரமணியசாமி வதம் செய்த காட்சியை திருச்செந்தூரை நோக்கி படையெடுத்த லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர். முருகா, கந்தா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என முழக்கமிட்டு தங்கள் பக்தியை பக்தர்கள் வெளிப்படுத்தினர். கடல் அலைபோல் திரண்டு வந்த பக்தர்கள் முருகனின் சூரசம்ஹாரம் விழாவை பார்த்து ரசித்து வணங்கி முருகனின் அருள் பெற்று சென்றனர். சூரசம்ஹாரம் விழாவையொட்டி திருச்செந்தூரே விழாகோலம் பூண்டிருந்தது. 

Night
Day