மோன்தா புயல் - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை, திருவள்ளுர் உட்பட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை மோன்தா புயலாக வலுப்பெற்றது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா, மோன்தா புயல் சென்னையில் இருந்து 440 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டு ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவித்தார். மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் மோன்தா புயல் நாளை அதி தீவிர புயலாக வலுவடையும் என்றும் இது  வடக்கு வடமேற்கு  திசையில் நகர்ந்து ஆந்திர கடலோரப் பகுதிகளான மசூலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினத்திற்கு இடையே நாளை இரவு கரையைக் கடக்கும் என்று தெரிவித்தார். புயல் கரையைக் கடக்கும் போது காற்று மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவித்தார். 

இந்நிலையில்  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ராணிப்பேட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தார். இதேபோல் திருவண்ணாமலை, வேலூர்,விழுப்புரம், கடலூர், நீலகிரி,கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தார்.

நாளை திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா, சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

Night
Day