வயலில் தேங்கிய மழைநீர் வடியாத அவலம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விளைநிலங்களில் மழை நீர் சூழ்ந்தும், அறுவைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் மழை நீரில் மூழ்கியும், நெல்மூட்டைகள் மழையில் நனைந்தும் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் ஆயிரத்து ஐநூறு ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. கடலங்குடி, விளாங்குடி அருகே உள்ள முட்டையான் வாய்க்காலை அதிகாரிகள் முறையாக தூர்வாரப்படாததால் வாய்க்கால்களில் செல்ல வேண்டிய மழை நீர்  வயல்கள் வழியாக செல்வதால் பல நாட்களாக தேங்கியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே வயல்களில் தேங்கியுள்ள மழைநீர் விரைவாக வடியும் வகையில் வாய்க்கால்களை  தூர் வார  வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு  நிவாரணம் வழங்க வேண்டும் என்றும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாளவிடுதி அருகே டன் கணக்கில் கொண்டு வரப்பட்டுள்ள நெல்களை கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். வெள்ளாளவிடுதி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த  விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை வெள்ளாள விடுதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் ஒரு  வாரத்திற்கு மேலாகியும்  கொள்முதல் செய்யாததால் டன் கணக்கில் தேக்கமடைந்துள்ளன. இதனிடையே விட்டு விட்டு மழை பெய்து வருவதால்   தார்ப்பாய் கொண்டு மூடுவதும் பின்னர் அதனை காயவைப்பதுமாக இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே நெல்மணிகள் முளைப்பதற்கு முன் கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மேலநாலாநல்லூர் கிராமத்தில் நடவு செய்யப்பட்டுள்ளா குறுவை சாகுபடி நெற்கதிர்கள் முற்றிய நிலையில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக அறுவடை பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், அப்பகுதியில் பெய்த கனமழையால் மாவட்டம் முழுவதும் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து முளைக்க தொடங்கியது. மேலநாலாநல்லூர் கிராமத்தில் பாசன வடிவாய்க்கால் தூர்வாரியாதாக கூறி முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டிய விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம்  புதுவயல், கல்லாக்கோட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிடப்பட்டு இருந்தன. இந்நிலையில், அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நெல் கதிர்கள் அனைத்தும் மழை நீரின் மூழ்கியதால்  விவசாயிகள் வேதனையடைந்தனர். விவசாய நிலங்களை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், மேல்புவனகிரி நிரந்தர நெல் கொள்முதல் நிலையத்தில் ஆமை வேகத்தில் நெல் கொள்முதல் நடைபெற்று வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டிகின்றனர். மேல்புவனகிரியில் செயல்படும் நிரந்தர நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அறுவடை செய்து எடுத்து வந்த நெல்லை ஒரு மாதத்திற்கு மேலாக தரையில் கொட்டி வைத்தனர். இந்நிலையில், மழையால் நெல்மணிகள் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படாமல் ஆமை வேகத்தில் நெல் கொள்முதல் நடைபெற்று வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டிகின்றனர்.  கொள்முதல் செய்யப்பட்ட பத்தாயிரம் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் பெய்த மழையால் குரும்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக 4 ஏக்கர் விவசாய நிலத்தில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது.  நீரோடைகள் ஆக்கிரமிப்பால், மழை காலங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும், புகார் தெரிவித்தும் வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர். எனவே, மழைநீரில் மூழ்கிய பயிர்களுக்கு உரிய இழப்பிடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day