தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரி 7-ல் வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் 2-ஆம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளை மேற்கொள்வது வழக்கம் என்றும், சுதந்திரத்திற்கு பின்னர் 1951ஆம் ஆண்டு முதல் இதுவரை 8 முறை வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் நடைபெற்று இருப்பதாகவும், கடைசியாக கடந்த 2002 முதல் 2004ஆம் ஆண்டு காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில், முதற்கட்டமாக பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அடுத்த கட்டமாக தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும்  யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் கூறினார். 

மேலும், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் நாளை முதல் தொடங்கும் என தெரிவித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், நவம்பர் 4ம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பெறப்படும் என குறிப்பிட்டார். 

இதைத்தொடர்ந்து, டிசம்பர் 9ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அடுத்தாண்டு பிப்ரவரி 7ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் எனவும் தெரிவித்தார். டிசம்பர் 8ஆம் தேதி முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை வாக்காளர்கள் தங்கள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்றும், அதன்பின் நோட்டீஸ் வழங்கப்பட்டு அதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

Night
Day