குழந்தையில்லாத ஏக்கத்தில் இருந்த பெண்... நூதன முறையில் கைவரிசை காட்டிய போலி மந்திரவாதி...

எழுத்தின் அளவு: அ+ அ-

குழந்தை பிறக்க மாந்திரீக பூஜை செய்வதாக கூறி நூதன முறையில் தங்க நகைகளை திருடும் போலி மந்திரவாதி போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பல இடங்களில் கை வரிசை காட்டி வந்த மந்திரவாதி எங்கு, எப்படி சிக்கினார் என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விசாலினி. திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் விசாலினி மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் இவரது வீட்டிற்கு ஜோசியம் பார்ப்பதாக கூறி மந்திரவாதி ஒருவர் வந்துள்ளார். அவரிடம் விசாலினி ஜோசியம் பார்த்த போது அவருக்கு குழந்தை இல்லை என தெரிந்து கொண்ட அந்த போலி மந்திரவாதி ஆறுதலாக பேசுவது போல நடித்துள்ளார். பிறகு அந்த மந்திரவாதி மாந்திரீக பூஜை செய்தால் உங்களுக்கு குழந்தை பிறக்கும் என்று நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

குழந்தை ஏக்கத்தில் இருந்த விசாலினி மந்திரவாதியின் பேச்சை முழுமையாக நம்பி எவ்வளவு செலவாகும் என கேட்டுள்ளார். இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பதைப் போல் இந்த வார்த்தையை எதிர்ர்பார்த்த அந்த மந்திரவாதி, 35 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றும் 7 பேர் வந்து மாந்திரீக பூஜை செய்வோம் என்றும் கூறியுள்ளார். ஆனால் அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று கூறிய விசாலினியிடம் 5 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார் மந்திரவாதி. அதுவும் இல்லை என்றதும் கிடைத்தவரை லாபம் என்று எண்ணிய மந்திரவாதி இரண்டாயிரம் ரூபாய் கேட்டுள்ளார். இரண்டாயிரமும் இல்லை என்று கூறிய விசாலினியை ஏமாற்றுவதையே நோக்கமாகக் கொண்டிருந்த அந்த மந்திரவாதி, தங்க நகை வைத்து மாந்திரீக பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதனை ஏற்றுக் கொண்ட விசாலினி 5 சவரன் தங்க நகை எடுத்து வந்து மந்திரவாதியிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கிய அந்த மந்திரவாதி செம்பு ஒன்றில் வைத்து புளியை வைத்து கட்டி வைப்பது போல நடித்து தங்க நகைகளை திருடியுள்ளார். பின்னர் அந்த செம்பை விசாலினியிடம் கொடுத்து மாலையில் தான் திறந்து பார்க்க வேண்டும் என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார் மந்திரவாதி. பின்னர்  மந்திரவாதி கூறியவாறு மாலையில் செம்பை திறந்து பார்த்த போது தான் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.

பின்னர் நகைகள் திருடப்பட்டது குறித்து கொளத்தூர் காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிளை கைப்பற்றி போலீசார் ஆய்வு  செய்த போது நூதனமுறையில் திருட்டில் ஈடுபட்ட மந்திரவாதி பழைய குற்றவாளியான  நெல்லை தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த 45 வயதான சூர்யா என்பது தெரிந்தது. இதனையடுத்து கொளத்தூர் போலீசார் நெல்லை சென்று சூர்யாவை கைது செய்து சென்னை கொண்டு வந்தனர். 

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்  2024 ஆம் ஆண்டு பழைய வண்ணாரப்பேட்டை பகுதியிலும்  சித்ரா என்ற பெண்ணிடம் குடும்பத்தில் தோஷம் கழிப்பதாக கூறி ஐந்தரை சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. 
போலி மந்திரவாதிகள் மேற்கொள்ளும் பல்வேறு தகிடுதத்தங்களை எவ்வளவு தான் செய்திகள் வாயிலாக வெளிச்சம் போட்டுக் காட்டினாலும் விசாலினியைப் போல் எத்தனையோ பேர் இன்னும் ஏமாந்து கொண்டு தான் இருக்கின்றனர் என்பதும் சூர்யாவைப் போன்ற போலி மந்திரவாதிகளும் காலத்திற்கேற்ப தங்களது தொழிலில் புதுப்புது யுக்திகளை புகுத்தி கொள்ளையடித்தும் வருகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

Night
Day