குடியிருப்புக்குள் புகுந்து கரடி அட்டகாசம்... கூண்டு வைத்து பிடித்ததால் பொதுமக்கள் நிம்மதி...

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கொத்தூர் என்ற பகுதிக்குள் புகுந்து, பெண்ணை கடித்து குதறிய கரடியால் பரபரப்பு ஏற்பட்டது. காலையிலேயே குடியிருப்புகளை கரடிகள் சுத்துப் போட்டதால், அப்பகுதியில் உள்ள ஒருவர் கூட வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதைக்குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மாமுடிமாடப்பள்ளி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வெலக்கல்நத்தம் அருகே உள்ள செத்தமலை பகுதியில் இருந்து இரண்டு குட்டி கரடிகள் மற்றும் ஒரு தாய் கரடி என மூன்று கரடிகள் மாமுடிமாடப்பள்ளி விவசாய நிலத்திற்குள் புகுந்தது. 

அப்போது விவசாய நிலங்களை சேதப்படுத்தியதுடன் மட்டுமல்லாமல், அங்கு பருத்தி எடுத்து கொண்டிருந்த மணிமேகலை என்ற பெண்ணை வலது கையில் கரடி கடித்துள்ளது. அதன்பின் அங்கு உடன் பணிபுரிந்தவர்கள் கரடியை விரட்டிவிட்டு, மணிமேகலையை சிகிச்சைக்காக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

சிறிது நேரம் கழித்து இரண்டு குட்டி கரடிகள் மலைப் பகுதிக்குள் சென்ற நிலையில், பெரிய தாய் கரடி மட்டும் பேட்டராயன்வட்டம் பகுதியில் உள்ள ராமி என்பவரின் வீட்டுக்குள் புகுந்தது. நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

பின்னர் சாலையில் நடந்து சென்ற கரடி, ராஜி என்பவரை தாக்கியுள்ளது. ராஜி, போராடவே கரடி, அங்கிருந்து தப்பியோடி, தோட்டத்தில் சென்று படுத்துக்கொண்டது. பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் மற்றும், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர், வலை அமைத்து கரடியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கரடி படுத்திருந்த இடத்தில் இருந்து அதனை அப்புறப்படுத்த வனத்துறையினர் நீண்ட நேரமாக முயற்சி செய்தனர். ஆனால் கரடி சுவற்றின் மீது ஏறி தப்பியது. நீண்ட நேரத்திற்கு பின்னர், வனத்துறையினரால் வைக்கப்பட்ட கூண்டுக்குள் தானாக வந்து சிக்கியது. 

Night
Day