எழுத்தின் அளவு: அ+ அ- அ
சேலம் அரசு மருத்துவமனை பிணவறைக்குள் அத்துமீறி நுழைந்த திமுக பெண் நிர்வாகி அடாவடியில் ஈடுபட்டுள்ளார். பிணவறையில் நுழைந்தது மட்டுமல்லாமல் அங்கிருந்த காவலர்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்து கொண்டுள்ளார். யார் அவர்? எதற்காக அடாவடியில் ஈடுபட்டார் என்பது குறித்து விளக்கமாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
சேலம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காதல் தோல்வியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடல் உடற்கூறாய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது இளைஞரின் உடலை அவரது உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் பிணவறை முன்பு குவிந்திருந்தனர்.
இதனை நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளத்துடித்த, கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த திமுக பெண் நிர்வாகி சங்கீதா என்பவர், தனது இருசக்கர வாகனத்துடன் பிணவறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
நுழைந்த வேகத்தோடு, தனது வண்டியை நிறுத்தி விட்டு அங்கிருந்த காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். எவ்வளவு நேரம் இறந்தவர் உடலுக்காக அவர்களை காக்க வைப்பீர்கள்? உடற்கூறாய்வு முடிந்தால் உடலை கொடுக்க வேண்டாமா? என கத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த காவல்துறையினர், திமுக நிர்வாகியான சங்கீதாவை, வெளியே செல்லுங்கள் என கூறியுள்ளனர். இதனையடுத்து, சங்கீதா, தனக்கும் சட்டம் தெரியும், நான் பார்க்க வேண்டிய இடத்தில் பார்த்துக் கொள்கிறேன் என மிரட்டும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது.
இளைஞரின் உடல் உடற்கூறாய்வு செய்து கொண்டிருக்கும் போதே, என்ன நடக்கிறதென தெரியாமல், தனது பலத்தை காட்டுகிறேன் என்ற நோக்கில், பிணவறையில் நுழைந்ததோடு மட்டுமல்லாமல், அங்கிருந்து காவலர்களை வேலை செய்ய விடாமல் அடாவடியில் ஈடுபட்ட திமுக பெண் நிர்வாகியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. எதாவது பிரச்சனைகளை உண்டாக்கியே திமுக தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி...