70 அடி உயர மெஸ்ஸி சிலை திறப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

'இந்தியா டூர் 2025' என்ற திட்டத்தின் படி 3 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, கொல்கத்தாவில் தனது சிலையை திறந்து வைத்தார்.

கால்பந்து உலகக் கோப்பையின் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி 'இந்தியா டூர் 2025' என்ற திட்டத்தின் படி, 3 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்ததால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்தநிலையில் கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள 70 அடி உயரமுள்ள, தனது முழு உருவச் சிலையை மெஸ்ஸி இணைய வழியில் திறந்து வைத்தார். அப்போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் உடனிருந்தார்.


இதனிடையே அர்ஜென்டினா அணியின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் 70 அடி உயர சிலை சிலை திறக்கப்பட்ட போது, அதனைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். அர்ஜென்டினா கொடி மற்றும் அந்த அந்த அணியில் ஜெர்சியை அணிந்து கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகக்கோப்பை தாங்கிய மெஸ்ஸியின் சிலையை கண்டு உற்சாகம் அடைந்தனர்.

தனது சிலையை திறந்து வைத்து பேசிய லியோனல் மெஸ்ஸி, தனக்காக இப்படி ஒரு விழாவை நடத்தியது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். மேலும் கொல்கத்தா மக்கள் அர்ஜென்டீனா அணிக்கும், தனக்கும் அளித்து வரும் ஆதரவால் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். இங்கு இருப்பதில் தான் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

சிலையை திறந்து வைத்த பின்னர் சால்ட் லேக் மைதானத்திற்கு மெஸ்ஸி வந்தார். அங்கு குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை பார்த்து மெஸ்ஸி கையசைத்தார். அப்போது உற்சாகம் அடைந்த ரசிகர்கள் விண்ணதிர முழக்கம் எழுப்பினர். மேலும் அந்த மைதானத்தில் நடந்த கால்பந்து அணி வீரர்களின் ஜெர்சியில் லியோனல் மெஸ்ஸி ஆட்டோகிராஃப் போட்டார்.

இதேபோல் லியோனல் மெஸ்ஸியை பார்க்கும் ஆவலில், தங்களது தேன் நிலவை ரத்து செய்து விட்டு புதுமண தம்பதியினரும் மைதானத்திற்கு வந்தனர். மெஸ்ஸியை பார்க்க ஆவலாக இருந்ததாகவும், கடந்த 10, 12 ஆண்டுகளாக அவரை பின்தொடர்ந்து வருவதாகவும் அந்த இளம்தம்பதியினர் நெகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.


Night
Day