வாகை சூடிய இந்திய மகளிர் அணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐசிசி மகளிர் உலகக்கோப்பையை வென்று இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.

2025ம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நவிமும்பையில் நடைபெற்றது. இதில், ஒருமுறை கூட கோப்பை வெல்லாத இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்தது. 

தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். 45 ரன்களில் ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழந்த நிலையில், பின்னர் வந்த ஜெமிமா 24 ரன்களிலும், கேப்டன் கவுர் 20 ரன்களிலும் வெளியேறினர். மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த ஷபாலி வர்மா 87 ரன்னில் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்களை இந்திய மகளிர் அணி குவித்தது. 

299 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்ரிக்க அணி வீராங்கனைகள், சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். தென்னாப்ரிக்க அணியின் கேப்டன் லாரா வால்வார்ட் அதிரடியாக விளையாடி வந்தநிலையில், மறுபுறம் அந்த அணியின் விக்கெட்கள் அடுத்தடுத்து விழுந்துக்கொண்டே இருந்தது. 98 பந்துகளில் 101 ரன்களை கடந்த போது தீப்தி ஷர்மா வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து லாரா வால்வார்ட் அவுட்டானார். 

தொடர்ந்து 45 புள்ளி 3 ஓவர்களில் 246 ரன்களுக்கு தென்னாப்ரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்திய அணியிடம் தோல்வியடைந்தது. இதன்மூலம், 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதன்முறையாக மகளிர் உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது. 

Night
Day