இந்திய அணி வெற்றி - தலைவர்கள் வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகளிர் உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வாழ்த்து செய்தியில், உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் எனவும், முதன்முறையாக கோப்பையை வென்று, அவர்கள் வரலாறு படைத்துள்ளனர் எனவும் தெரிவித்தார். இந்த திருப்புமுனையான தருணம் மகளிர் கிரிக்கெட்டை மேலும் உயர்வான நிலைக்குக் கொண்டு செல்லும் எனக்கூறிய குடியரசுத் தலைவர், நமது வீராங்கனைகள் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த விதத்தை நான் போற்றுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் வாழ்த்து செய்தியில், இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி பெற்ற வெற்றி, பிரமிக்க வைப்பதாகவும், இறுதி ஆட்டத்தில் அணியின் செயல்பாடு சிறந்த திறமை மற்றும் அசாத்திய நம்பிக்கையுடன் அமைந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சரித்திர வெற்றி வருங்கால வீராங்கனைகளுக்கு, விளையாட்டில் ஈடுபடத் தூண்டுதலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வாழ்த்து செய்தியில், உலகச் சாம்பியன் இந்திய அணிக்கு பாராட்டுகள் எனவும், இந்த வெற்றி நாட்டிற்கு ஒரு கிரீடம் சூட்டும் தருணம் எனவும் கூறியுள்ளார். இது இந்தியாவின் பெருமையை வானளவு உயர்த்தியுள்ளதாக கூறியுள்ள அமித்ஷா, இந்த வெற்றி கோடிக்கணக்கான பெண்களுக்கு உத்வேகத்தின் பாதையை அமைத்துக் கொடுத்துள்ளது என்றார். 

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் வாழ்த்து செய்தியில், இந்திய அணியின் வெற்றி நிகழ்வு எப்பேர்ப்பட்ட பெருமைமிகு தருணம் எனவும், நமது Women in Blue வரலாறு படைத்து, ஒரு பில்லியன் இதயங்களைத் தொட்டுவிட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியின் தைரியம், மன உறுதி ஆகியவை இந்தியாவுக்குப் பெருமையைத் தேடித் தந்துள்ளதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, எண்ணற்ற இளம் பெண்கள் பயமின்றி கனவு காண ஊக்கமளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Night
Day