இளம்வீரர்கள் அடங்கிய சென்னை அணி... 6வது கோப்பையை வெல்லுமா CSK...

எழுத்தின் அளவு: அ+ அ-

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் இரண்டு இளம் வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தட்டி தூக்கியது. யார் அவர்கள்... இளம் கன்றுகள் கடந்து வந்த பாதை என்ன... என்பதை விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கக்கூடிய 19வது ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்குகிறது. தக்க வைக்கப்பட்ட 173 வீரர்கள் போக மீதமுள்ள 77 இடங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 350 பேர் பதிவு செய்திருந்தனர். இதற்கான மினி ஏலம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் நடைபெற்றது. எப்போதும் EXPERIENCE என்ற பெயரில் 30+ வீரர்களையே ஏலத்தில் எடுப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இந்த மினி ஏலத்தில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது சென்னை அணி... இதுவரை சையத் முஷ்டாக் அலி டிராபி, மாநில ப்ரீமியர் லீக் போட்டிகளில் விளையாடி ஜொலித்து காட்டிய ராஜஸ்தானின் கார்த்திக் ஷர்மா மற்றும் உத்தரபிரதேசத்தின் பிரசாந்த் வீரை தலா 14 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியிருக்கிறது. 19 வயதான கார்த்திக் ஷர்மாவின் அடிப்படை விலை வெறும் 30 லட்சமாகவே இருந்த நிலையில், மற்ற அணிகளுடன் கடும் போட்டியிட்டு இறுதியில் தட்டித்தூக்கியது சென்னை அணி.... இவரே அதிக தொகைக்கு ஏலம் போன uncapped வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தி இருக்கிறார்...

வலது கை பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான கார்த்திக் ஷர்மா, உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்திற்கு பேர் போனவர்... கூச் பெஹார் ட்ராபியில் 17 சிக்சர்களுடன் 181 ரன்கள் குவித்திருக்கும் இவர், வினு மன்கட் ட்ராபியில் 22 சிக்சர்கள் விளாசியிருக்கிறார். டி20 போட்டிகளில் 164 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் திறன் கொண்ட இவர், இதுவரை விளையாடி உள்ள 12 டி20 போட்டிகளில் 334 ரன்களை குவித்து எதிரணிகளை துவம்சம் செய்திருக்கிறார்.

தனது முதல் ரஞ்சி டிராபி போட்டியிலேயே உத்தரகாண்ட் அணிக்கு எதிராக சதம் விளாசி ராஜஸ்தான் அணிக்கு பக்க பலமாக இருந்திருக்கிறார் இந்த இளம் வீரர் கார்த்திக் ஷர்மா.... தோனி ஓய்வுக்குப் பிறகு விக்கெட் கீப்பர் இடத்தை நிரப்பவும், மிடில் ஆர்டரை வலுப்படுத்தவும் கார்த்திக் ஏற்றவராக இருப்பார் என கருதியே அவரை அத்தனை கோடி கொடுத்து சென்னை அணி எடுத்துள்ளதாக கருதப்படுகிறது.

இதேபோன்று 20 வயதான உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரசாந்த் வீரையும் 14 கோடியே 20 லட்சத்திற்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது. இடது கை சுழற்பந்து வீச்சாளர் மற்றும் அதிரடி ஆட்டக்காரரான இவர், 167 ஸ்ட்ரைக் ரேட்டில் எதிரணி பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்யும் வல்லமை கொண்டவராக பார்க்கப்படுகிறார். இதுவரை 12 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள பிரசாந்த் வீர், 112 ரன்களையும், 6.45 என்ற சிறந்த எகானமியில் 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.

இவை மட்டுமின்றி, சென்னை அணியில் அதிரடி ஆட்டத்துக்கு பேர் போன மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர்கள் இல்லை என்ற குறை போவதற்காக அக்கேல் ஹோசைனை எடுத்திருக்கிறது சிஎஸ்கே அணி...

Left hand பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சாளரான இவர், இதுவரை மேற்கு இந்திய தீவுகள் அணிக்காக விளையாடிய 87 சர்வதேச டி20 போட்டிகளில் 2 ஆயிரத்து 170 ரன்களும், 83 விக்கெட்களையும் வீழ்த்தியிருக்கிறார். ராஜஸ்தானுக்கு விட்டுக்கொடுக்கப்பட்ட ரவிந்திர ஜடேஜாவுக்கு நிகராகவே அக்கேல் ஹோசைனை சென்னை அணி ஏலத்தில் எடுத்திருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

இதேபோல், சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சஹார் 5 கோடியே 20 லட்சத்திற்கும், நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி 2 கோடி ரூபாய்க்கும், மேத்யூவ் ஷாட் ஒன்றரை கோடி ரூபாய்க்கும், இந்திய அணி வீரர் சர்ப்ராஸ் கான் 75 லட்சம் ரூபாய்க்கும், மற்றொரு நியூசிலாந்து வீரர் ஜாக் ஃபௌல்க்ஸ் 75 லட்சம் ரூபாய்க்கும், இந்திய வீரர் அமன் கான் 40 லட்சம் ரூபாய்க்கும் சென்னை அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது.

ஏற்கனவே ட்ரெடிங் மூலமாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சென்னை அணி எடுத்திருக்கிறது. இதன்படி, சஞ்சு சாம்சன் மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தொடக்க வீரர்களாகவும், கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் ஒன் டவுனிலும், ஷிவம் துபே டூ டவுனிலும், டெவால்ட் பிரேவிஸ் 3 டவுனிலும், பிரசாந்த் வீர் அல்லது கார்த்திக் ஷர்மா 4 டவுனிலும், எம்.எஸ். தோனி, நூர் அஹமத், ராகுல் சஹார், கலீல் அஹமத் மற்றும் அன்ஸ்குல் கம்போஸ் ஆகியோர் பிளேயிங் 11ல் விளையாடினால் அடுத்தாண்டு கப்பு சென்னைக்கு தான் என ரசிகர்கள் மனக்கணக்கு போட தொடங்கிவிட்டனர்.  இளம் வீரர்களை ஏலத்தில் எடுத்து விமர்சனத்துக்கு சென்னை அணி முற்றுப்புள்ளி வைத்திருந்தாலும், இவர்கள் ஐபிஎலில் ஜொலிப்பார்களா என்ற கேள்விக்கான பதில் அடுத்தாண்டு ஐபிஎலுக்கு பிறகே தெரிய வரும்...  

Night
Day