எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
18வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்களை எடுத்தது. பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்களை எடுத்தார். தொடர்ந்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன்மூலம், 6 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை பெங்களூரு அணி தன்வசப்படுத்தியுள்ளது. தொடர்ந்து, போட்டியின் ஆட்ட நாயகன் விருதை பெங்களூரு அணியின் ஆல் ரவுண்டரான க்ருணால் பாண்டியா பெற்று அசத்தியுள்ளார்.
18 வருடமாக ஐபிஎல் கோப்பைக்காக போராடி வந்த பெங்களூரு அணி கோப்பையை உச்சி முகர்ந்து ரசிகர்களுக்கு பரிசு அளித்துள்ளனர். சாம்பியன் பட்டத்தை பெங்களூரு அணி கைப்பற்றிய நிலையில் மைதானத்தில் வான வேடிக்கைகள் வெடித்தன.
இதனிடையே, கடைசி ஓவரில் ஆர்சிபி அணியின் வெற்றி உறுதியான நிலையில், அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தங்கள் அணியின் நீண்ட நாள் கனவு நிறைவேற போவதால் ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார். தொடர்ந்து, தனது மனைவி அனுஷ்கா சர்மாவை கட்டியனைத்து ஆனந்த கண்ணீருடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அந்த, காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து, பரிசு அளிப்பு நிகழ்வில் அதிக ரன்கள் விளாசி ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சனுக்கும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா தொப்பியை கைப்பற்றிய குஜராத் அணி வீரர் பிரசித் கிருஷ்ணாவுக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. தொடரில், 2ம் இடத்தை பிடித்த பஞ்சாப் அணிக்கு 12 கோடியே 50 லட்சம் ரொக்க பரிசும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது. இறுதியாக, சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி அணிக்கு வெற்றி கோப்பையும், 20 கோடி ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. பின்னர், கோப்பையுடன் அணி வீரர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விராட் கோலி கோப்பைக்கு முத்தம் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
18 வருடங்களில் முதல் முறையாக பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றதை அடுத்து பெங்களூரு நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. பெங்களூரு அணியின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகத்தில் துள்ளி குதித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, ஐபிஎல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சாம்பியன்கோப்பையை வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணிக்கு கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமய்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ஐபிஎல் கோப்பையை வென்றதன் மூலம் பெங்களூரு அணி வரலாற்று சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், அணியின் கனவு இறுதியில் நனவாகி விட்டதாகவும், இ சாலா கப் நம்தே என்றும் குறிப்பிட்டுள்ளார். பெங்களூரு அணியின் சிறப்பான செயல்திறன், அசைக்க முடியாத உறுதி போன்றவற்றால் கர்நாடகம் பெருமைப்படுவதாகவும், உலகெங்கும் உள்ள ரசிகர்களை சிலிர்ப்படைய செய்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
18 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் தனது பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 18 ஆண்டுகளாக காத்திருப்பு முடிவுக்கு வந்து விட்டதாகவும், ஐபிஎல் புதிய சாம்பியன் பெங்களூரு அணிக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளது. அத்துடன் 18 வயது நிரம்பிய வாக்காளர்களா ? நீங்கள் ஜொலிக்கும் நேரம் வந்து விட்டது என்றும், வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டு வெற்றி வீரராக வாக்களிக்க தயாராகுமாறும் இளம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.