எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்க தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கால்பந்தாட்ட சங்கத்துக்கு தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை அதன் நிர்வாக குழு, சங்கத்தை நிர்வகிக்க வேண்டும் என கடந்த 2023ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த மே மாதம் தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்துக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, 22 உறுப்பினர்களுடன் சென்னை, நெல்லை, கோவை மற்றும் திருச்சியை சேர்ந்த 4 பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.
தேர்தல் நடைபெறுவதற்கு முன் முறைகேடாக 4 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதற்கு எதிராக பல்வேறு மாவட்ட கால்பந்தாட்ட சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், என்.செந்தில்குமார் அமர்வு, ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தேர்தலுக்கு முன் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது என தெரிவித்தனர்.
தேர்தல் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற விதிகளுக்கு எதிராக தேர்தல் நடைபெற்றிருப்பதால் மறு தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டனர்.
இதுமட்டுமின்றி தேர்தல் நடைமுறைகளை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் முடித்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.