எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் அஸ்வின் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். எனினும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அஸ்வின் வெளியிட்டுள்ள பதிவில், ஒவ்வொரு முடிவும் ஒரு தொடக்கத்தை கொண்டிருப்பதாகவும் ஐபிஎல் தொடரில் தனது காலம் இன்றுடன் முடிவு பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். அதேநேரம் கிரிக்கெட்டின் ஆர்வலராக பல்வேறு தொடர்களில் தனது பயணம் இன்று தொடங்குவதாகவும் அஸ்வின் அறிவித்துள்ளார். ஐபிஎல்லில் சிறப்பான நினைவுகளுக்கும், உறவுகளுக்கும் அனைத்து அணிகளுக்கும் நன்றி கூற விரும்புவதாகவும் மிக முக்கியமாக ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் நன்றி என்றும் அஸ்வின் கூறியுள்ளார்.
16 ஐபிஎல் தொடர்களில் ஐந்து வெவ்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், 187 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையுடனும், 221 போட்டிகளில் விளையாடி அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ஏழாவது வீரர் என்ற பெருமையுடனும் ஓய்வு பெற்றுள்ளார்.