ஆஸி-க்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி - இந்தியா வெற்றி

எழுத்தின் அளவு: அ+ அ-

ரோகித் சர்மா, விராட் கோலியின் அசத்தல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்திய அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. இந்நிலையில், இந்த தொடரின் கடைசி மற்றும் 3வது போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ஓபனர்கள் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் இருவரும் நல்ல துவக்கம் தந்தனர். மார்ஷ் 41 ரன்களிலும், ஹெட் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்களில் ரென்ஷா மட்டும் அரைசதமடிக்க, மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியேறினர். 46.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 236 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணியில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட் வீழ்த்தினார்.

237 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் சுப்மன் கில் 24 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் தனது 33வது சதத்தை பூர்த்தி செய்தார். முதலிரண்டு போட்டிகளில் டக்அவுட் ஆகி ஏமாற்றமளித்த விராட் கோலி அரை சதமடித்து அசத்தினார். 38.3வது ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்த இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 121 ரன்களுடனும், விராட் கோலி 74 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்ததன் மூலம் 1க்கு 2 என்ற கணக்கில் தொடரில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

Night
Day