எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ள நபர்கள் பெங்களூருவை விட்டு வெளியே செல்ல கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த 4ம் தேதி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது. பெங்களூரு அணி மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ஆகியவை இணைந்து வெற்றி விழாவை கொண்டாட ஏற்பாடு செய்தன. பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடினர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை தாமாக முன்வந்து கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடைபெற்றது. வழக்கு தொடரப்பட்டுள்ள நபர்கள் பெங்களூருவை விட்டு வெளியே செல்ல கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்கு விசாரணையில் பதிலளித்தவர்களுக்கு எதிராக எந்தவித முன்கூட்டியே நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று கூறிய கர்நாடக உயர்நீதிமன்றம், வழக்கை ஜூன் 16-ஆம் தேதி வரை ஒத்திவைத்தது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டவுடன் கைது செய்தால் போதும் என்றும் காவல்துறையினருக்கு கைது செய்யும் அதிகாரம் உண்டு என்றும் நீதிபதி தெரிவித்தார்.