பொளந்து கட்டும் வெயில்... தற்காத்துக்கொள்ள டிப்ஸ்...

எழுத்தின் அளவு: அ+ அ-

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள மருத்துவர்கள் தரும் ஆலோசனைகள் என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

தமிழகம் முழுவதும் மக்கள் கடும் வெயிலால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்க்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. தமிழகத்தில் வெப்பநிலை மேலும் 2 டிகிரி செல்சியஸ் முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக அடுத்து வரக்கூடிய நாட்களில் 103 டிகிரி பாரன்ஹீட் முதல் 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை சற்று கலக்கமடைய செய்துள்ளது.

இதனிடையே கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் மேற்பரப்பு நீரின் அசாதாரண வெப்பமயமாதலால் வகைப்படுத்தப்படும் ஒரு காலநிலை வடிவமாக கருதப்படும் எல் நீனோவைத் தொடர்ந்து வரக்கூடிய கோடைக்காலத்தில் தென்னிந்திய தீபகற்பத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

எல் நீனோ காரணமாக கடல் உள்வாங்கி வெப்ப தண்மையை வெளியிடும்போது நிலப்பரப்பில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்து வரக்கூடிய ஒருவாரத்திற்கு தமிழகத்தில் பரவலாக வெப்பம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. 

அதே போன்று அக்கினி நட்சத்திரம் காலத்தில் கிழக்கு கடலோரப் பகுதிகளான சென்னை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும்,  கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என்றும் வானிலை தன் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அதே வேலையில் பழச்சாறு, சோடா போன்றவற்றை குடிப்பதை விட வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்ள தண்ணீர் தான் சிறந்தது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வெயிலில் அதிக நேரம் இருந்து விட்டு உடனடியாக குளிர்ந்த நீர் குடிப்பதால் உடலுக்கு தீங்கு ஏற்படாது என்றும், அதே வேளையில் தண்ணீரை மெதுவாகக் குடிக்க வேண்டும், வெயில் காலத்தில் கதர் ஆடைகளை அணிந்து, உடலுக்கு தேவையான குடிநீரை பருக வேண்டும் என்கிறார் பொது நல மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி அதிகளவு தண்ணீரைப் பருகி, வெயில் நேரத்தில் அவசியம் இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதே நம் அனைவருக்கும் ஒரே ஒரு வாய்ப்பாக உள்ளது. 

Night
Day