நொடி பொழுதில் உயிரிழப்பு... அச்சுறுத்தும் மாரடைப்பு... தப்பிப்பது எப்படி...

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசியில் பணியில் இருந்த நபர், நொடி பொழுதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திடீர் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? மாரடைப்பில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்...

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியப்புரம் பகுதியை சேர்ந்த ராமையா பிள்ளை என்பவரது மகன் ஹரிஹரசுதன். 56 வயதான இவர், நகர் பகுதியில் உள்ள ஓர் தனியார் ஸ்கேன் மையத்தில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் வியாழக்கிழமை காலை மகிழ்ச்சியாக குடும்பத்தினரிடம் பணிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர், வீட்டுக்கு உயிருடன் திரும்பபோவதில்லை என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. பணிக்கு ஒரு விதமான சோர்வோடு சென்ற ஹரிஹரசுதன், அங்கிருந்த நாற்காலியில் உடம்பு முடியாமல் அமர்ந்திருக்கிறார். 

அப்போது சக ஊழியர்கள் அவருடன் சகஜமாக பேசும் போதும் அவர் சோர்வுடனே இருந்துள்ளார். இதனை பெரியளவில் கண்டுகொள்ளாத ஊழியர்களும் தங்களது வேலையை கவனித்துள்ளனர். இந்நிலையில் நாற்காலியில் முடியாதவாறு அமர்ந்திருந்த ஹரிஹரசுதன், மேஜையில் சாய்ந்து படுத்தவாறே திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த செவிலியர்கள், மற்றும் பணியாளர்கள் சிலர் அவருக்கு முதலுதவி அளிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

ஆனால் அவருக்கு மயக்கம் தெளியாத நிலையில், சக ஊழியர்கள் அவரை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஹரிஹரசுதன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்க, அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். 

இதுகுறித்து விசாரித்தபோது ஹரிஹரசுதனுக்கு முதல் முறையாக மாரடைப்பு ஏற்பட்டதாக தெரியவந்தது. மேலும் பணிக்கு வந்த அவருக்கு ஏற்கனவே இதயத்தில் வலி இருந்ததாகவும், அவர் ஸ்கேன் சென்டரில் இருந்த செவிலியர்களிடம் வலி குறித்து தெரிவித்திருந்தால், முதலுதவி அளித்து காப்பாற்றி இருக்கமுடியும் எனவும் கூறப்படுகிறது. 

நாளுக்குநாள் மாரடைப்பால் உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாரடைப்பு என்பது பல காரணங்களால் வருவதாகவும், ஒரு சிலருக்கு முதல் முறை மாரடைப்பு வரும்போதே உயிரிழப்பு ஏற்படும் என்றும் சென்னையை சேர்ந்த இதய நோய் மருத்துவர் பிரீத்தம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

உடலில் சர்க்கரை, கொழுப்பு, இரத்த அழுத்தத்தின் அளவை ஆறு மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்த இதய மருத்துவர், கொழுப்பு சத்து குறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். உடம்பில் மன அழுத்தம் அதிகமானால் திடீர் மாரடைப்பு ஏற்படும் எனவும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டு, எந்த நேரமும் என்ன வேண்டுமென்றாலும் நடக்க வாய்ப்பு உள்ளதாகாவும் எச்சரிக்கிறார் இதயநோய் மருத்துவர் பிரீத்தம்.

இளைஞர்களக்கு மாரடைப்பு அதிகம் ஏற்படுவதற்கு இரத்த குழாய் அடைப்பு காரணம் இல்லை என்றும், இதயத்தில் சதை அளவு அதிகளவில் சேர்ந்தால் மாரடைப்பு ஏற்படும் எனக்கூறும் மருத்துவர் பிரீத்தம், நாம் அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் விளக்கம் அளித்தார்.

இளம் சமுதாயத்தினர் துரித உணவு சாப்பிட்டு, சரியான உடற்பயிற்சி இல்லாமல் இளம் வயதிலேயே மாரடைப்பால் உயிரிழப்பது அதிகமாகி வரும் நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு, நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Night
Day