பெயர் சர்ச்சை... கோவிலில் அனுமதி மறுப்பு... நடுரோட்டில் கல்யாணம்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்துவாக இருந்தாலும் பெயருக்கு பின்னால் கிறிஸ்தவ பெயர் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக சிவாலயத்தில் திருமணம் செய்து கொள்ள கோயில் நிர்வாகமும், அர்ச்சகர்களும் அனுமதி மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கு நடந்தது இந்த சம்பவம்? பின்னணி என்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்...

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணுச்சாமி. இவரது மகன் கண்ணன் என்பவருக்கும் தருவைகுளம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் அந்தோணி திவ்யா என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு, தூத்துக்குடி பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் வைத்து திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து  இருவீட்டாரும் தூத்துக்குடி பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயிலில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொண்டு திருமணம் குறித்த விவரங்களை எடுத்து கூறினர். கோயில் நிர்வாகம் சம்மதம் தெரிவித்து மணமக்களின் சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கேற்றாற்போல், அவர்களும் சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளனர். மணமகனின் சான்றிதழில் எந்தபிரச்சனையும் இல்லை என கூறப்படுகிறது. ஆனால் மணப்பெண்ணின் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையில் அந்தோணி திவ்யா என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை கவனித்த கோயில் நிர்வாகம் பெண்ணின் பெயரில் கிறிஸ்தவ பெயர் இருப்பதால் கோயிலில் வைத்து திருமணம் செய்ய முடியாது என மறுத்துள்ளனர்.  மேலும் உரிய ஆவணங்களை முறையாக சமர்ப்பித்தால் மட்டுமே திருமணம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். 

இருவீட்டாரும் இந்துக்கள் என வாய்மொழியாக தெரிவித்தாலும் தங்களுக்கு முறையான ஆவணங்கள் வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் கறாராக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயிலிலேயே திருமணம் செய்ய முடிவெடுத்த இருவீட்டாரும்  பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயில் உள்ளே திருமணம் செய்ய வந்துள்ளனர்.

அப்போது கோயில் நிர்வாகம் மற்றும் திருக்கோயில் அர்ச்சகர்கள் பெயரில் பிரச்சனை இருப்பதால் உள்ளே திருமணம் செய்யக்கூடாது என அனுமதி மறுத்துள்ளனர். மணமக்களின் வீட்டார் விளக்கம் அளித்தும் ஏற்க மறுத்தநிலையில் வேறு வழியின்றி கோயிலுக்கு வெளியே மணமகன் கண்ணன் - மணமகள் அந்தோணி திவ்யாவுக்கு உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

அனைத்து ஆவணங்களையும் முறையாக சமர்ப்பித்தும்  அந்தோணி என்ற கிறிஸ்தவ பெயர் மணமகள் பெயருக்கு முன்னாள் இருந்ததால் கோயிலுக்குள்  வைத்து திருமணம் நடத்த கோயில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் அனுமதி மறுத்ததாக குற்றம்சாட்டியுள்ள உறவினர்கள், அனுமதி மறுத்தவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்துவாக இருந்தாலும் மணமகளின் பெயரில் கிறிஸ்தவ பெயர் இருப்பதாகக்கூறி கோயிலில் திருமணம் செய்து வைக்க மறுப்பதுதான் சாதி மறுப்பு, சமத்துவம் பேசும் திமுக அரசின் விளம்பர மாடலா என்ற கேள்வியும் சாமானிய மக்களிடையே எழுந்துள்ளது..

Night
Day