ஆசிரமம் என்ற பெயரில் உதவி கேட்டால் "உஷார்"...

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆதரவற்ற பெண்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரமம் நடத்துவதாக கூறி இரக்‍க குணம் கொண்டவர்களை ஏமாற்றி கால் சென்டர் வைத்து நடத்தி பல கோடி ரூபாய் சம்பாதித்து 
தனிப்பட்ட முறையில் சொகுசு வாழ்க்‍கை வாழ்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆதரவற்றவர்களின் பெயரை ​பயன்படுத்தி மோசடி கும்பல் எங்கே செயல்படுகிறது.. விரிவாக பார்க்‍கலாம்...

சென்னை திருவல்லிக்கேணி ரங்கநாதன் தெருவை சேர்ந்த முத்து என்பவர், சேப்பாக்கம் பகுதியில் பழைய பேப்பர் கடை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் முத்துவின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட பெண்மணி ஒருவர், தாங்கள் அனாதை ஆசிரமம் வைத்து இருப்பதாகவும் அதில் வயதானவர்கள், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத்திறனாளிகள் இருப்பதாகவும் அவர்களுக்கு உதவி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதே போன்று ஜனவரி மாதம் 12ம் தேதி முத்துவின் தொலைபேசியில் பேசிய பெண் ஒருவர், பெரம்பூர் பட்டேல் சாலையில் உள்ள அன்னை தெரசா ஓல்ட் ஏஜ் என்கிற தொண்டு நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி, தாங்கள் முடிந்தவரை இன்றைக்குள் உதவி செய்யுமாறு அந்தப் பெண் கூறியுள்ளார். இதனை அடுத்து முத்துவின் தொலைபேசி எண்ணிற்கு ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இருப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோக்களை அந்த பெண்மணி அனுப்பி வைத்துள்ளார். 

இதனை நம்பிய முத்து, நீங்கள் நேரில் வந்தால் பணத்தை தருவதாக கூறியதை அடுத்து, ஜனவரி மாதம் 12ஆம் தேதி மாலை 4 மணி அளவில் சுதா ஆனந்த் என்பவர், தான் அன்னை தெரசா ஆசிரமத்தில் இருந்து வருவதாக கூறி ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு சென்றுள்ளார். இதனை அடுத்து முத்துவிற்கு சந்தேகம் ஏற்படவே அந்த நபர்கள் கூறிய ஆசிரமத்தை பார்க்கச் சென்றபோது அந்த இடத்தில் ஒரு கால் சென்டர் மட்டுமே இயங்கி வந்தது தெரிந்தது.

அந்த கால் சென்டரில் இருபதுக்‍கும் மேற்பட்ட பெண்கள் இதே போன்று சென்னையில் உள்ள பல நபர்களிடம் வயதானவர்களின் புகைப்படங்களை அனுப்பி வைத்து பணம் சுருட்டியது தெரிய வந்தது. இப்படி மோசடி செய்யும் அன்னை தெரசா டிரஸ்ட் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்‍கோரி செம்பியம் காவல் நிலையத்தில் பணத்தை கொடுத்து ஏமாந்த முத்து புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், கீழ்ப்பாக்கம் மற்றும் கொளத்தூர் பகுதியில் இந்த நிறுவனம் வயதானவர்களை வைத்து ஹோம் நடத்தி வருவதும், அதனை வைத்து பலரிடம் பணம் வாங்கி நூதன முறையில் பல கோடி ரூபாய் சம்பாதித்து வருவதும் குண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்தின் இயக்குநரான சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த கோபி என்பவரை தேடி வந்தனர். தலைமறைவான அவரை தனிப்படை போ​லீசார் கொடைக்கானலில் கைது செய்தனர். அத்துடன் அவரது காப்பகத்தில் பணிபுரிந்த மேற்பார்வையாளர் கண்ணன் என்பவரையும் போலீசார் சுற்றி வளைத்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த வருடத்தில் மட்டும் சுமார் 10 கோடி ரூபாய் வரை பணம் வசூல் செய்துள்ளதும், பெரும்பாலான பணத்தை கோபி தனது சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தி அவரும், அவரது குடும்பமும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தும் வருவதும் தெரிய வந்தது. 

இதனை அடுத்து போலீசார் கோபி மற்றும் கண்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கோபி கடந்த 10 வருடத்திற்கு மேலாக இதுபோன்ற ஆசிரமத்தை நடத்தி வந்துள்ளதால் பல கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். 

தொண்டு நிறுவனம் என்கிற பெயரில் பல்வேறு மோசடிகள் சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே தமிழகத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்கள், காப்பகங்களில் போலீசார் விரிவான விசாரணை நடத்தி இதுபோன்ற மேலும் பல மோசடிக் ‍கும்பல்கள் உருவாகாமல் இருக்க நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என சமூக ஆர்வலர்கர் கோரிக்கை விடுத்துள்ளனர்...

Night
Day